சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, தமிழ் பட உலகில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கதாநாயகி யார்? அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (ஏ.சாய்ராம், சென்னை)

நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில், கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாயில் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்!

***

சத்யராஜ், பிரபு ஆகிய இருவரில், யார் வயதில் மூத்தவர்? இருவரும் அண்ணன்–தம்பியாக நடித்து இருக்கிறார்களா? (ஆர்.ரகோத்தமன், வேலூர்)

பிரபுவை விட சத்யராஜ் 2 வயது மூத்தவர். ‘சின்ன தம்பி பெரிய தம்பி,’ ‘பாலைவன ரோஜாக்கள்,’ ‘சிவசக்தி’ ஆகிய படங்களில் அண்ணன்–தம்பியாக நடித்து இருக்கிறார்கள்!

***

குருவியாரே, பெண் வேடத்தில் விஜய் சேதுபதி எப்படி? (செ.மதியழகன், கடலூர்)

சபல சுபாவம் உள்ள ஆண்களை தடுமாற வைக்கும் ‘மல்லிகை மோகினி’ போல் அழகாக இருந்தார்!

***

சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் எப்போது திரைக்கு வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘என்.ஜி.கே.’ படத்தை அடுத்து, ‘காப்பான்’ படம் திரைக்கு வரும்!

***

குருவியாரே, ரகுல் பிரீத்சிங்குக்கு என்ன வேடம் கொடுத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்? (எஸ்.ஆர்.பாலசிங், விருத்தாசலம்)

நெட்டையான அவர், குட்டை பாவாடையுடன் கூடைப்பந்து விளையாடினால், பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள், பெருவாரியான ரசிகர்கள்!

***

1980 மற்றும் 1990–களில் கல்லூரி மாணவிகள் மத்தியில், ‘கனவுக்கண்ணனாக’ இருந்த மோகன் என்ன ஆனார்? (பி.நித்யானந்தம், கோவில்பட்டி)

மோகன், ‘குடிநீர் கேன்’ வியாபாரம் செய்து வருவதாக தகவல். அவ்வப்போது நடிகர் சங்க கூட்டங்களில் தலையை காட்டி, தன்னை புதுப்பித்துக்கொள்கிறார்!

***

குருவியாரே, ‘நெடுநல்வாடை’ படத்தில் வரும் அஞ்சலி நாயர் எப்படி? (க.ராம்குமார், ஸ்ரீரங்கம்)

அஞ்சலி நாயர், கேரளாவை சேர்ந்தவர். அழகிலும், நடிப்பிலும் ‘நம்பர்–1’ ஆக தெரிகிறார். இவர், விமான பணிப்பெண் என்பதால், மற்ற கதாநாயகிகள் பயப்பட தேவையில்லை. விமானத்தில் பறக்கும் வேலைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாராம். நடிப்பெல்லாம் அப்புறம்தான் என்கிறார்!

***

பல வெற்றி படங்களை தந்த டைரக்டர் பேரரசு என்ன ஆனார்? (வி.சுதாகர், பொள்ளாச்சி)

அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் அவ்வப்போது சிறந்த டைரக்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முதல் படத்தை அடுத்து இரண்டாவது படத்தை கொடுப்பதற்கு அவர்கள் சிரமப்படுவது ஏன்? (எம்.கல்யாண், தாமரைப்பட்டி)

இரண்டாவது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம். படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வர தகுதியான தயாரிப்பாளரை தேர்வு செய்வதிலேயே காலம் கடந்து விடுகிறதாம்!

***

கதாநாயகியாக இருந்து குணச்சித்ர வேடத்துக்கு மாறியிருக்கும் இப்போதைய நடிகைகளில், நடிப்பில் நீண்ட கால அனுபவம் உள்ளவர் யார்? (வே.சந்தோஷ், ஆரணி)

ராதிகா சரத்குமார். 41 வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி–திரிஷா ஜோடி, ‘96’ என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறகும், மீண்டும் ஜோடி சேராதது ஏன்? (என்.சேதுராமன், ஜோலார்பேட்டை)

இரண்டு பேரையும் இணைத்து ‘கிசுகிசு’க்கள் வந்ததும் ஒரு காரணம்!

***

சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிப்பதற்கு சில கதாநாயகிகள் போட்டி போடுகிறார்களாமே....அப்படியென்ன அவரிடம் இருக்கிறது? (வெ.சு.லட்சுமண், போளூர்)

இளம் ரத்தம்! வயதில் குறைந்தவருடன் ஜோடியாக நடித்தால், நமக்கும் வயது குறைந்தது போல் இருக்கும் என்று கருதுகிறார், ஒரு கதாநாயகி. ஏற்கனவே ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த குள்ளமான நடிகை, மார்க்கெட் இழந்து வீட்டில் சும்மா இருப்பதால், சிவகார்த்திகேயனுடன் மறுபடியும் ஜோடி சேர விரும்புகிறார்!

***

குருவியாரே, அந்தக்கால கதாநாயகிகள் ஸ்ரீப்ரியாவும், ஜெயசித்ராவும் இணைந்து நடித்து இருக்கிறார்களா? அப்படி நடித்திருந்தால், அந்த படத்தின் பெயர் என்ன? (எஸ்.ரவீந்திரன், சித்தாப்புதூர்)

ஸ்ரீப்ரியாவும், ஜெயசித்ராவும் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

***

ஜீவா நடித்துள்ள ‘கீ’ படம் எப்போது திரைக்கு வரும்? (ஏ.சரஸ்வதி, பெருங்களத்தூர்)

அந்த படம், வருகிற ஏப்ரல் 12–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, சூர்யா, கார்த்தி, விஷால் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிப்பார்களா? (ஆர்.கோபிநாத், சூரமங்கலம்)

நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள். அந்த படத்தில் மூன்று பேருமே இணைந்து நடிக்க இருக்கிறார்கள்!

***

சமந்தா கவர்ச்சியாக நடிப்பதற்கு அவரின் புகுந்த வீட்டில் கண்டனம், எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கவில்லையா? (கே.ரியாஸ் அகமது, செய்யாறு)

கவர்ச்சியாக வருவதும் ஒரு நடிப்புதான் என்பதை சமந்தாவின் புகுந்த வீட்டினர் புரிந்து கொண்டிருக்கிறார்களாம். (துட்டு வந்தால் சரி)

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர்கள் செந்தில், யோகி பாபு ஆகிய இருவரும் உறவினர்களா? இரண்டு பேருமே அண்ணன்–தம்பி மாதிரி தெரிகிறார்களே...? (எஸ்.ரவி, அரியலூர்)

செந்தில், யோகி பாபு இருவரும் உறவினர்கள் அல்ல. ஆனால், யோகி பாபு மீது செந்திலும், செந்தில் மீது யோகி பாபுவும் அன்புடன் இருக்கிறார்கள்!

***

சிருஷ்டி டாங்கேவுக்கு எது அழகு? மூக்கா, உதடா, பற்களா, முகமா? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது அவருடைய கன்னத்து குழி!

***

குருவியாரே, நயன்தாராவின் நீண்ட கால ஆசை எது? அது நிறைவேற வாய்ப்பு இருக்கிறதா? (இரா.சுந்தரி, மதுரை)

ஒரு படத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்க வேண்டுமாம். இதுதான் அவருடைய நீண்ட கால ஆசை!

***

அபிநந்தன் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பார்களா? (எம்.ஏமயில், பரமன்குறிச்சி)

படம் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன!

***