சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, நயன்தாரா அரசியலில் இறங்கி ஒரு பெரிய பதவிக்கு வந்தால், முதல் நடவடிக்கையாக என்ன செய்வார்? (பி.கணபதி, சென்னை–22)

காதலர் தினத்தை அரசு விழாவாக அறிவிப்பதுடன், அதை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று சட்டமும் போடுவார்!

***

பிரபுதேவா தனது புதிய படங்களுக்கு முன்னணி கதாநாயகி ஒருவரை சிபாரிசு செய்கிறாராமே...உண்மையா? (எம்.சுதர்சன், நாகர்கோவில்)

இது, ரொம்ப பழைய தகவல். அவருடைய சிபாரிசை அந்த கதாநாயகி ஏற்காததுடன், அவரை கண்டும் காணாததும் போல் நடந்துகொள்கிறாராம்!

***

குருவியாரே, அமலாபால் சமீபகாலமாக தலைமறைவு ஆனது போல் காணாமல் போய் விட்டாரே...? (கே.ஸ்ரீதர்ராஜன், திருச்சி)

தன்னை பற்றிய அடுத்த பரபரப்பை எங்கே, எப்போது ஏற்படுத்தலாம்? என்று நெருக்கமானவர்களுடன் அமலாபால் ஆலோசனை நடத்தி வருகிறார்!

***

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடக்கிறதா, இல்லையா? (ஆர்.துரைசாமி, கோவை–6)

அந்த முயற்சியில், டைரக்டர் மணிரத்னம் ஈடுபட்டார். பின்னர் அதை அவர் தள்ளிப்போட்டார். இருப்பினும், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியை அவர் முழுவதுமாக கைவிடவில்லை!

***

குருவியாரே, கடந்த 2009–ல் வெளியான ‘யாவரும் நலம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறதா? அதுபற்றிய விவரங்களை வெளியிட முடியுமா? (ஆர்.நம்பிராஜ், உளுந்தூர்பேட்டை)

‘யாவரும் நலம்’ படத்தை விக்ரம் கே.குமார் டைரக்டு செய்திருந்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே டைரக்டு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்!

***

ஆதாயம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கும் நடிகை யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ஒருவர், இருவர் அல்ல. பல பேர் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, நடிகை சினேகாவுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? (ஜே.கிறிஸ்டோபர், தூத்துக்குடி)

ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் இருக்கிறான். பையன் படுசுட்டியாம்!

***

கவுதம் கார்த்திக்கும், பிரியா ஆனந்தும் காதலித்து வந்தார்களே...அவர்களின் காதல் என்ன ஆனது? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

இருவருக்கும் இடையே காதல் இருந்தது உண்மை. திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருங்கி வந்தார்கள். இப்போது அவர்களின் காதலிலும், கல்யாணத்திலும் சின்ன இடைவெளி ஏற்பட்டு இருக்கிறதாம்!

***

குருவியாரே, தமிழ் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத நகைச்சுவை காட்சி எது? வாழைப்பழ காமெடியா? ‘கைப்புள்ள’ காமெடியா? (எம்.சூர்யபிரகாஷ், காஞ்சிபுரம்)

வாழைப்பழ காமெடி, கைப்புள்ள காமெடி ஆகிய இரண்டும் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்தான். என்றாலும், நாகேஷ், டி.எஸ்.பாலையா நடித்த ‘கல்யாண பரிசு’ படத்தின் காமெடி, நகைச்சுவையின் உச்சம். காலத்தால் அழிக்க முடியாதது!

***

நிவேதா பெத்துராஜ் குள்ளமானவரா, உயரமானவரா? (எஸ்.சுலைமான் சேட், அவினாசி)

நிவேதா பெத்துராஜ் குள்ளமும் இல்லாமல், உயரமும் இல்லாமல், நடுத்தர உயரமுள்ள அழகி!

***

குருவியாரே, கதாநாயகனாக அறிமுகமாகி, கதாநாயகனாகவே நடித்து வந்த மாதவன் டைரக்டு செய்யப்போவதாக வந்த தகவல் உண்மையா? (ஆர்.வி.ஞானகுமார், வேலூர்)

உண்மைதான். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை டைரக்டர் மாதவன் படமாக்கி வருகிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது!

***

ஓவியா எந்த ஊரை சேர்ந்தவர்? அவருடைய மார்க்கெட் நிலவரம் இப்போது எப்படியிருக்கிறது? (எம்.கல்யாண், சேலம்)

ஓவியா, கேரளாவை சேர்ந்தவர். அவருடைய மார்க்கெட் இப்போது உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அவர் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்!

***

குருவியாரே, பாலா இயக்கி, விக்ரம்–சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படம் இந்தியில் தயாராகிறதாமே...? (ஏ.ஜார்ஜ், ஊட்டி)

‘பிதாமகன்’ படம் இந்தியில் தயாராவது உறுதியான தகவல்தான். ‘சேது’ படத்தை ‘தேரே நாம்’ என்ற பெயரில் இந்தியில் தயாரித்த சதீஷ் கவுசிக், ‘பிதாமகன்’ படத்தை இந்தியில் தயாரிக்கிறார்!

***

சிவகார்த்திகேயன் நடித்து வந்த புதிய படத்துக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள்? (கோ.சரவண பாண்டியன், அருப்புக்கோட்டை)

சிவகார்த்திகேயன் படத்துக்கு, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது, எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ படத்தில் இடம் பெற்ற பாடல் வரியாகும்!

***

குருவியாரே, ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமான நதியா இப்போது என்ன செய்கிறார்? (கே.சி.அன்பரசன், திண்டிவனம்)

நதியா இப்போது, ‘ரோஜா’ என்ற ‘சின்னத்திரை’ தொடரில் நடித்து வருகிறார். அதில், அவர் நடிகை நதியாகவே வருகிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘என் தம்பி,’ ‘என் மகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர் யார்? தயாரித்தவர் யார்? (கா.பிரவின்குமார், பேராவூரணி)

என் தம்பி, என் மகன் ஆகிய இரண்டு படங்களையும் டைரக்டு செய்தவர், சி.வி.ராஜேந்திரன். தயாரித்தவர், கே.பாலாஜி!

***

குருவியாரே, ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த திரிஷாவின் அடுத்த இலக்கு எது? (பி.செல்லதுரை, வந்தவாசி)

‘நம்பர்–1’ இடத்தை பிடிப்பதே திரிஷாவின் அடுத்த இலக்காம்!

***

தமிழ்நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்ய தயார் என்று கூறிவரும் தமன்னாவுக்கு தமிழ் பேச, எழுத, படிக்க தெரியுமா? (சா.ரவீந்தர், பட்டுக்கோட்டை)

தமன்னா தமிழ் பேச தெரிந்து கொண்டார். இப்போதெல்லாம் அவர் சரளமாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்தவரையே அவர் திருமணம் செய்து கொண்டால், தமிழில் எழுத–படிக்கவும் கற்றுக் கொள்வாராம்!

***

குருவியாரே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க–ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் என்கிறார்களே...உண்மையா? (எம்.அஸ்வின், வண்டலூர்)

அப்படி ஒரு ஆதாரப்பூர்வமற்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது!

***

தமிழ் பட உலகில், பி.சுசீலாவுக்கு இணையான பின்னணி பாடகி யார்? (ஜ.ராம்சுந்தர், புதுக்கோட்டை)

யாரும் இல்லை. பி.சுசீலாவின் இனிய குரலுக்கும், அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கைக்கும் ஈடு–இணை எந்த பாடகியும் இல்லை!

***

குருவியாரே, பாரதிராஜா–இளையராஜா–வைரமுத்து ஆகிய மூன்று பேரும் மீண்டும் இணைந்தால்...? (ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்)

‘‘அதிசயம்...ஆனால் உண்மை’’ என்று பேசப்படுவார்கள்!

***

நகைச்சுவை நடிகர் யோகி பாபு எத்தனை படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

யோகி பாபு எந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்...அவ்வளவுதான்!

***