நயன்தாராவை விமர்சித்த ராதாரவி நீக்கம்: தி.மு.க.வுக்கு கமல் பாராட்டு


நயன்தாராவை விமர்சித்த ராதாரவி நீக்கம்: தி.மு.க.வுக்கு கமல் பாராட்டு
x
தினத்தந்தி 25 March 2019 8:53 PM GMT (Updated: 25 March 2019 8:53 PM GMT)

நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்த ராதாரவி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதற்காக தி.மு.க.வுக்கு கமல் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆலந்தூர்,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜியை சந்திக்க நேற்று கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரையுலகை சேர்ந்த பெண் நயன்தாராவை மரியாதையுடன் நடத்த வேண்டிய முதல் கடமை சக நடிகர்களுக்கு உள்ளது. அதைவிட்டு சாதாரண ஆண்மகனாக இல்லாமல் கலைஞனாக உள்ள ராதாரவி பேசியது வருத்தத்திற்கு உரியது. கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள். ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய தி.மு.க.விற்கு பாராட்டுகள்.

தேர்தல் களத்தை நேரடியாக காண தயக்கம் இல்லை. இந்த பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்கிற்கு தோள் கொடுக்க விரும்புகிறேன். இன்று போட்டியிடும் முகங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த முகங்களை உங்களுக்கு தெரிய வைப்பது என்னுடைய கடமை. அதற்கு என் முகத்தை கார் போல் பயன்படுத்த உள்ளேன். அதில் அவர்கள் பயணிக்கட்டும்.

மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன். ஒரு தொகுதியில் நின்றால் தொகுதி நலன் கருதி சுயநலம் கருதி அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் போட்டியிடாதது பற்றி சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் விமர்சனம் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும்.

மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரகடனத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியம் இல்லாத பெரும்கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை. தேர்தல் பிரகடனம் செய்வதற்கு முன் சாத்தியமா? என்பதை வல்லுனர்களுடன் பேசி தான் நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன்வந்தோம்.

கொல்கத்தா பயணம் அரசியல் ரீதியானது. மம்தா பானர்ஜியை சந்திப்பேன். அதற்கான காரணத்தை வந்து சொல்வேன். தூத்துக்குடியில் 2 பிரபலமான வேட்பாளர்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபலம் ஆவார் என்ற நம்பிக்கையில் நிறுத்தி உள்ளோம்.

மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story