ஆஸ்பத்திரியில் அனுமதி டைரக்டர் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை


ஆஸ்பத்திரியில் அனுமதி டைரக்டர் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 March 2019 10:45 PM GMT (Updated: 28 March 2019 6:45 PM GMT)

தமிழ் பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி டைரக்டராக இருந்தவர் மகேந்திரன். யதார்த்த கதைகளை படமாக்குவதில் திறமையானவர் என்று பெயர் பெற்றவர்.

1978-ல் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகி உதிரிப்பூக்கள், ஜானி, நண்டு, பூட்டாத பூட்டுகள், மெட்டி, கைகொடுக்கும் கை, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல படங்களை இயக்கினார்.

முள்ளும் மலரும் படத்தில் வரும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடலும் உதிரிப்பூக்கள் படத்தில் வரும் ‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’ பாடலும் காலத்தால் அழியாதவை. சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் உள்ளிட்ட சில படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார்.

ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்ற பெருமை பெற்றவர். சமீப காலமாக படங்களில் நடித்து வந்தார். விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக வந்தார். மகேந்திரனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டயாலிசிஸ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மகேந்திரன் மகனும் டைரக்டருமான ஜான் மகேந்திரன் எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story