சினிமா செய்திகள்

யதார்த்த சூப்பர் ஹீரோ ‘‘பேட்மேன்’’ + "||" + Superhero Batman

யதார்த்த சூப்பர் ஹீரோ ‘‘பேட்மேன்’’

யதார்த்த சூப்பர் ஹீரோ ‘‘பேட்மேன்’’
1939-ம் ஆண்டு ஓவியர் ‘பாப் கேன்’ மற்றும் ‘பில் பிங்கர்’ ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் ‘பேட்மேன்.’ அந்த பாத்திரத்திற்கு இன்றோடு, 80 வயதாகிறது.
80 வருடங்களுக்கு முன்பு, ஓவியரின் கற்பனை அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தை, திரைப்படங்களாக, டி.வி.தொடர்களாக, கார்ட்டூன் கதைகளாக... பல தளங்களில் மக்கள் கொண்டாடினர். இத்தனை ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் இந்தக் கதாபாத்திரத்தின் அடுத்த படைப்பு எப்பொழுது வெளிவரும் என்று எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பேட்மேன் எனப்படும் வவ்வால் மனிதனின் யதார்த்தம்தான் காரணம். ஏனெனில் உலகை காப்பாற்ற, ‘எங்கோ ஒரு கிரகத்தில் இருந்து சூப்பர் ஹீரோக்கள் வரமாட்டார்கள்’, நம்மில் ஒருவர் தான் அநீதியை எதிர்த்து போராடவேண்டும் என்ற யதார்த்ததில் பிறந்தவர்தான், இந்த பேட்மேன். அதனால்தான் பேட்மேன் கதாபாத்திரம் 80 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.

டிசி காமிக்ஸ் 1938-ம் ஆண்டு ‘ஆக்‌ஷன் காமிக்ஸ்’ என்னும் பெயரில் சூப்பர் மேன் காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டிருந்தனர். அதன் வெற்றியால் பதிப்பாளர்கள் பலரும், அதே போன்ற காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட விரும்பினர். அதற்காக பாப் கேன் உருவாக்கிய கதாபாத்திரம் தான் பேட்மேன். வவ்வால் மனிதனாக உலக ரசிகர்களின் மனதில் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கும், பேட்மேனின் பிறந்த கதையை பற்றி ஓவியர் பில் பிங்கர் கூறுகிறார்.

“சூப்பர் மேனைப் போன்ற அட்டகாசமான உடல்வாகுடன், தான் வரைந்திருந்த படத்தை பாப் கேன் என்னிடம் காட்டினார். முழுவதுமாக முகத்தை மறைக்காத முகமூடி. சாதாரண காலணி, கையுறைகள் அல்லாத கைகள், பின்னால் இறகு போன்ற ஒரு அமைப்பு. அது வவ்வால் இறக்கை போல் இருந்தது. அதுதான் பேட்மேன். அதில் நான் பாப்கேனுக்கு சில யோசனைகளைக் கூறி, பேட்மேன் தோற்றத்தில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்தினோம். கையுறை, தலைக்கவசத்துடன் இணைந்த முகமூடி, காலணி போன்ற சில மாற்றங்களை செய்த பின் பேட்மேன் கம்பீரமாக காட்சியளித்தான்” என்று கூறியிருக்கிறார். இப்படி பாப்கேனின் கற்பனையிலும், பில் பிங்கரின் வழிகாட்டுதலிலும் உருவான வவ்வால் மனிதன், 1939-ம் ஆண்டே கார்ட்டூன் கதைகளில் பறக்க ஆரம்பித்துவிட்டான். ஆம்..! 1939-ம் வருடம் டிசி காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘த கேஸ் ஆப் த கெமிக்கல் சிண்டிகேட்’ என்ற காமிக்ஸ் புத்தகம்தான், பேட்மேனை வெளி உலகிற்கு, முதன்முதலில் வெளிகாட்டியது.

மனிதர்களோடு, மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் வவ்வால் மனிதனுக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். அதற்கு முன்னர் வெளியான சூப்பர்மேனுக்கும், வவ்வால்மனிதனின் ரசிகர்களுக்கும் முட்டல்-மோதல் ஏற்பட்டது என்றால், வவ்வால் மனிதனின் செல்வாக்கை புரிந்து கொள்வீர்கள். முதல் பேட்மேன் காமிக்ஸை தொடர்ந்து, புதுப்புது கதைகளத்தில் பேட்மேன் பயணிக்க ஆரம்பித்தான். கார்ட்டூன் கதைகளுக்கு அடுத்தகட்டமாக, வவ்வால்மனிதனின் கார்ட்டூன் திரைப்படங்களும் வெளிவந்தன. கதை புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட, பலமடங்கு வரவேற்பினால் வவ்வால்மனிதன் புகழ் உச்சியில் பறந்தான். அடுத்ததாக, திரைப்படங்கள். இந்த காலக்கட்டம்தான் பேட்மேன் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூப்பர்ஹீரோ திரைப்படங்களை உலுக்கி பார்த்த காலக்கட்டம். 1980-ல் தொடங்கி 1995-ம் ஆண்டு வரை, சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு சோதனை காலம் எனலாம். கதைகள் சலிப்பு தட்டியதால், மக்கள் சூப்பர் ஹீரோ அலைகளில் இருந்து வெளியே வரத் தொடங்கினர்.

பல்வேறு காரணங்களால் துவண்டு போயிருந்த சூப்பர் ஹீரோ கதைகள், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் கைபட்டதும் தங்கள் பொற்காலத்தை காணத் தொடங்கின. பேட்மேனுக்கு இந்த காலத்து இளைஞர்கள் ரசிகர்களாக மாறியதற்கும் நோலனே முக்கிய காரணம்.

கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களில், மனித வாழ்க்கையில் சந்திக்கும் இயல்பான பிரச்சினைகளை, கதையோட்டத்தின் மூலம் காண்பிக்கக்கூடிய இயல்பு கொண்டவர். ஏற்கனவே யதார்த்த சூப்பர் ஹீரோவான பேட்மேன், கிறிஸ்டோபர் நோலனின் இந்த மேஜிக்கால் மக்களுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார். அதோடு கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘பேட்மேன்’ வரிசை படங்கள் வசூல் சாதனையையும் நிகழ்த்தின.

மற்ற சூப்பர் ஹீரோக்களில் இருந்து பேட்மேன் தனித்து திகழ, யதார்த்தம் தான் பலமாக அமைந்தது. ராபர்ட் லவ்ரி நடிப்பில் 1949-ம் ஆண்டு வெளியான படம் ‘பேட்மேன் அண்ட் ராபின்.’ இந்தப் படத்தின் ஒரு காட்சியில் பேட்மேன் கார் ஓட்டிச் செல்வார். அப்போது கார் என்ஜின் அதிக சூடாகி நடுவழியில் அவர் அவதிக்குள்ளாவார். அந்த காலத்து கார்கள் அப்படித்தான். என்னதான் பேட்மேனாக இருந்தாலும் அவரும் மனிதர் தானே. அந்த யதார்த்தம் தான் மக்களை பேட்மேன் பக்கம் சாய வைத்தது.

கிறிஸ்டியன் பேல் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம், ‘பேட் மேன் பிகின்ஸ்.’ இந்தப் படத்தில் ஒரு பிச்சைக்காரருக்கு புரூஸ் வெய்ன் (பேட்மேனின் சமூக பெயர் மற்றும் அடையாளம்) தனது கோட்டைக் கொடுப்பார். அதன் பின் பல நாட்கள் கழித்து பேட்மேன் தோற்றத்தில் ஒருவனுடன் மோதிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த பிச்சைக்காரன் கோட்டுடன் தென்படுவார்.

அப்போது அந்த பிச்சைக்காரன் அணிந்து இருக்கும் கோட்டை “நைஸ் கோட்” என்று கூறுவதுடன், மீண்டும் எதிரியுடன் குஸ்தியில் இறங்கிவிடுவார். இப்படி பல நூறு உதாரணங்களை யதார்த்த நாயகனின் சிறப்புகளாக கூறலாம்.

பேட்மேன் படங்கள் பலவற்றில், வில்லன்களிடம் அவர் அடிவாங்கி துவண்டு கீழே விழுவது, ரத்தம் வழிவது, மேலாடை இல்லாத அவரது உடம்பில் ஆறாத காயங்கள் தென்படுவது என அனைத்திலும் யதார்த்தம் மிளிர்வதால் தான் பேட்மேனை கடந்த 80 வருடங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்னமும் கொண்டாடுவார்கள்.

பேட்மேனின் உதவிக்கு பல பொருட்கள் இருப்பதை போல, அவருக்கு உதவ சில மனிதர்களும் உண்டு. அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

பாக்ஸ்:- இவர் தான் பேட்மேனின் தொழில்நுட்ப உதவியாளர். இவரது உதவியின்றி பேட்மேனின் சாகசங்கள் நமத்து போய்விடும்.

அல்பிரெட்:- இவர் புரூஸ் வெயினின் உதவியாளர், காப்பாளர், நல விரும்பி.

ஜெனரல் கார்டன்:- போலீஸ் அதிகாரியான இவரும் குற்றங்களையும், குற்றவாளிகளையும் குறைக்கும் பேட்மேனுக்கு ஒருவகையில் உதவியாளர்தான்.

கேட் உமன்:- இவரை பேட்மேனுக்கு உதவி செய்பவர் என்றும் கூறலாம், உபத்திரம் கொடுப்பவா் என்றும் கூறலாம். ஏனெனில் இவர் குழப்பமான ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார். பேட்மேனை ஆபத்தில் இருந்து காப்பாற்றவும் செய்வார். தனக்கு ஒரு ஆபத்து என்று வரும் போது பேட்மேனை சிக்க வைத்துவிட்டு தப்பியும் விடுவார்.

பேட்மேன் பயன்படுத்திய பொருட்கள்

பேட்மேன் படங்களில் அவர் பல வகை உபகரணங்களை பயன்படுத்தியிருப்பார். அவரது வீரதீர சாகசங்களுக்கு அவை பெருமளவில் கைகொடுத்திருக்கும். அந்த பொருட்களில் பிரபலமான சிலவற்றின் பட்டியல் இது.

பேட்ரெங், க்ராப்ளிங் கன், பேட் ஷார்க் ரெப்ளென்ட், லை டிடெக்ட்டர், பேட் பாட், பேட் மொபைல் ரிமோட் கன்ட்ரோல், பெல்ட் டசெர், பேக் வாம்பயர் டீத், பிங்கர் டசெர், செல்போன் சோனார் டிவைஸ், கிரிப்டோனைட் ரிங்.

மேற்கண்ட பொருட்களை எல்லாம், பேட்மேன் பரவலாக பயன்படுத்தியிருப்பார்.

பேட்மேனாக தோன்றியவர்கள்

பேட்மேன் கதைகள் பல படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகி உள்ளன. 40-க்கும் மேற்பட்டோர் இதுவரை பேட்மேனாக நடித்துள்ளனர். குறிப்பிட்டுக் கூறும்படியான சில படங்களும், அதில் பேட்மேனாக நடித்தவர்களின் பட்டியலும் இதோ...

பேட்மேன் (1943) - லீவிஸ் வில்சன்

பேட்மேன் அண்ட் ராபின் (1949) - ராபர்ட் லவ்ரி

பேட்மேன் (1966) - ஆடம் வெஸ்ட்

பேட்மேன் (1989) - மைக்கேல் கேட்டோன்

பேட்மேன் ரிட்டர்ன்ஸ் (1992) - மைக்கேல் கேட்டோன்

பேட்மேன் பார் எவர் (1995) - வல் கில்மர்

பேட்மேன் அண்ட் ராபின் (1997) - ஜார்ஜ் லூனி

பேட்மேன் பிகின்ஸ் (2005) - கிறிஸ்டியன் பேல்

த டார்க் நைட் (2008) - கிறிஸ்டியன் பேல்

டார்க் நைட் ரைசஸ் (2012) - கிறிஸ்டியன் பேல்

பேட்மேன் வெர்ஸஸ் சூப்பர்மேன் (2016) - பென் அப்லெக்

சூசைட் ஸ்குவாட் (2016) - பென் அப்லெக்

ஜஸ்டிஸ் லீக் பென் (2017) - பென் அப்லெக்