சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில் ! குருவியார் + "||" + Cinematic question answer! Kuruviyar

சினிமா கேள்வி பதில் ! குருவியார்

சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
குருவியாரே, சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி யார்? ஸ்ரீதிவ்யாவா, நயன்தாராவா? (எஸ்.சண்முகராஜ், கரூர்)

நயன்தாராவை விட, ஸ்ரீதிவ்யாவே பொருத்தமாக இருந்ததாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சொல்கிறார்கள்!

***

லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சின்னத்திரை’யில் செய்து வந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடருமா, தொடராதா? (கா.விஜயராஜ், புதுச்சேரி)

‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடராது. அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடரை செய்யப்போவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

***

குருவியாரே, பழைய கதாநாயகர்களில், ’நகைச்சுவை தாதா’ வேடத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் யார்? (ஜே.வி.தங்கமணி, செட்டிக்குளம்)

பார்த்திபன்! இவர் பொருந்துகிற அளவுக்கு வேறு எந்த பழைய கதாநாயகர்களும் நகைச்சுவை தாதா வேடத்துக்கு பொருந்த மாட்டார்கள்!

***

தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு பேரில் நடிப்பில் சிறந்தவர் யார்? (சி.சுதர்சன், கடலூர்)

நடிப்பில் சிறந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதை அவர், ‘காக்கா முட்டை’ படத்தில் நிரூபித்து இருந்தார். தமன்னாவுக்கு நடிப்பில் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை!

***

குருவியாரே, இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆகிவிட்ட விஜய் ஆண்டனி, ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (மு.சாதிக்பாட்சா, பெருங்களத்தூர்)

விஜய் ஆண்டனியின் சம்பளம் ரூ.3 கோடி என்று கேள்வி. அவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் வெற்றி பெற்றால், சம்பளத்தை மேலும் ஒரு கோடி கூட்டுவது என்று முடிவு செய்து இருக்கிறாராம்!

***

ஜெய்க்கும், அஞ்சலிக்கும் எப்போது காதல் மலர்ந்தது, எப்போது அந்த காதல் முறிந்தது? (ஜான் ஆபிரகாம், மதுரவாயல்)

ஜெய்க்கும், அஞ்சலிக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்ததாம். ‘பலூன்’ படத்தில் நடித்து முடித்த நேரத்தில், அவர்களின் காதல் முறிந்து போனதாம்!

***

குருவியாரே, திரிஷா திரையுலகுக்கு வந்து 15 வருடங்கள் ஆகியும், குண்டாகாமல் உடலை ஒல்லியாகவே வைத்திருப்பது எப்படி? (எஸ்.குமாரராஜா, வேதாரண்யம்)

அளவான உணவும், முறையான உடற்பயிற்சியுமே காரணம். வேறு எந்த மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை!

***

விஷால்–அனிஷா ஜோடிக்கு எப்போது திருமணம் நடக்க இருக்கிறது? (எம்.ஜானகிராமன், கள்ளக்குறிச்சி)

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், முதல் நிகழ்ச்சியாக விஷால்–அனிஷா திருமணம் நடைபெற இருக்கிறதாம்!

***

அர்ஜுன் சமீபகாலமாக கதாநாயகன் வேடங்களை மறந்து வில்லன் வேடங்களை ஏற்க துணிந்து விட்டாரே, ஏன்? (பி.சஞ்சய், ஓசூர்)

அவரை தேடி கதாநாயகனுக்கான வாய்ப்புகள் வருவதில்லையாம். வில்லன் வேடங்களே வரிசை கட்டி நிற்கிறதாம். அறுபதை தாண்டியபின்பும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர், அர்ஜுன்!

***

இன்றைய திரையுலகில் பிழைக்க தெரிந்த நடிகர்–நடிகைகள் யார்–யார்? (வே.சுந்தரமூர்த்தி, மதுரை)

இன்றைய ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் பிழைக்க தெரிந்தவர்கள்தான்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில், மிக உயரமானவர் யார்? (எம்.கே.ராஜாராம், ஸ்ரீரங்கம்)

விஷால்! உயரமானவர்களுக்கு எல்லாம் உயரமானவர் இவர்தான்!

***

‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்த சாய் தன்சிகா கவர்ச்சியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதே? (ஜே.டேவிட், பெங்களூரு)

ஒரே மாதிரியாக நடித்தால் ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்பட்டு விடும் என்பதால், சாய் தன்சிகா கவர்ச்சி ‘ரூட்’டில் பயணிக்க துணிந்து இருக்கிறார்!

***

குருவியாரே, வடிவேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் ‘பேய் மாமா’ படம் எந்த நிலையில் உள்ளது? (எஸ்.ஜெயசீலன், பாலக்காடு)

வடிவேல் மீதான புகார்கள் பேசி முடிக்கப்பட்டு விட்டன. அதைத்தொடர்ந்து, ‘பேய் மாமா’ படத்துக்கான கதை விவாதம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்!

***

மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத ஒரு அம்சம் சிருஷ்டி டாங்கேவிடம் இருப்பதாக பேசப்படுகிறதே...அது என்ன? (மா.குருமூர்த்தி, விளாத்திகுளம்)

கன்னத்து குழியழகு! சமீபகால கதாநாயகிகளில் சிருஷ்டி டாங்கே தவிர, வேறு யாரிடமும் இந்த அம்சம் இல்லை!

குருவியாரே, கீர்த்தி சுரேஷ் நகரத்து நாயகி வேடத்தில் பிரகாசிக்கிறாரா, கிராமத்து அழகியாக மனம் கவர்கிறாரா? (வி.தமிழ்செல்வன், பட்டுக்கோட்டை)

கிராமம், நகரம் என இரண்டிலும் கீர்த்தி சுரேஷ் அழகுதான். என்றாலும், நகரத்தை விட கிராமத்து வேடத்தில் அவர் அதிகமாக வசீகரிக்கிறார்!

***

விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களில், மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் எது? வேடம் எது? 

(கே.செல்வகுமார், சேலம்)

‘தர்மதுரை’ படத்தில் அவர் நடித்த டாக்டர் வேடம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. காதலில் தோல்வி அடைந்த டாக்டராக விஜய் சேதுபதி நெஞ்சை நெகிழவைத்து இருந்தார்!

***

குருவியாரே, 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்த நக்மா திருமணம் செய்து கொண்டாரா, இல்லையா? தற்போது என்ன செய்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார்!

***

குருவியாரே, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில், நகைச்சுவை நடிகர் யார்? (ஆர்.ரவீந்திரன், வேலூர்)

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில், நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது, யோகி பாபு சீசன் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்!

***


ஆசிரியரின் தேர்வுகள்...