சினிமா செய்திகள்

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் + "||" + Director Mahendran is dead  Political Leadership - celebrity mourning

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு  அரசியல் தலைவர்கள்- திரை உலக  பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- 

"தமிழ் திரையுலக இயக்குநர்களில் 'கதாநாயகராக' விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79 ஆவது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்று சோகச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு 'இலக்கணமாக' விளங்கிய அவர் ஒரு 'யாதார்த்த சினிமா இயக்குநர்' என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர். தமிழ் உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை, வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர்! மகேந்திரன் கதை, வசனம் எழுதி, இயக்கிய ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் இன்றைக்கும் 'அண்ணன் - தங்கை பாசத்திற்கு' அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் திகழ்வதை நாம் காண்கிறோம். 

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல 'துக்ளக்' போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் - எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி, பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர். பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகேந்திரன் மறைவு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் தெரிவித்திருப்பதாவது: 

தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்த ஆளுமை மகேந்திரன் ஐயா மறைந்தாலும் தன் கலைப் படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார். இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார். 

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: 

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். 

அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்துச் சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசிய வண்ணம் இருக்கிறது. தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதைகூறலுக்காகவும் நினைவு கூரப்பட்ட திரைப்படம்.அந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையைப் பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மிகக் குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார். அங்குதான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது. 

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன.காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களை பேட்ட வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு. 

கதாசிரியராக, இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன. ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவும் அதுதானே. தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன். நிறைவான பயணம். சென்று வாருங்கள் சார் இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார். 

மகேந்திரன் மறைவு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்திருப்பதாவது: முள்ளும் மலரும் மரணம்?. இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்'!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு...ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது! இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்திருப்பதாவது: இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். 

தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர். ‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. 

கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன். ‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய ‘அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.

 எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.

 புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. 

இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருப்பதாவது: இயக்குநர் மகேந்திரன், எளிமைதான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும. இவ்வாறு இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது.வரலாறு மறக்க முடியாத இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன். இதய அஞ்சலி சார். இவ்வாறு இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது: 'முள்ளும் மலரும்' என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். 'உதிரிப்பூக்கள்' எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகின்றன.இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்
ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
2. நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகல்
நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
3. நடிகர்கள் அமலா பால் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு
நடிகர்கள் அமலா பால் -பஹத் பாசில் ஆகியோருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
4. அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது பாராட்டுக்குரியது- நடிகை திரிஷா
அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என நடிகை திரிஷா கூறி உள்ளார்.
5. காதலனை பிரிந்தார் நடிகை இலியானா?
இலியானாவும் அவரது காதலர் ஆண்ட்ரூவும் பிரிந்து விட்டார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.