என்னை கட்சியிலிருந்து நீக்கலாம், ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாக இருப்பேன்; நடிகர் ராதாரவி


என்னை கட்சியிலிருந்து நீக்கலாம், ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாக இருப்பேன்; நடிகர் ராதாரவி
x
தினத்தந்தி 8 April 2019 4:13 PM GMT (Updated: 8 April 2019 4:13 PM GMT)

என்னை கட்சியிலிருந்து நீக்கலாம் ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாக இருப்பேன் என நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

நடிகர் ராதாரவி கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாரா பற்றி பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில், ராதாரவியின் கருத்துக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதுடன், அவருக்கு எதிராக கண்டனங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். 

கொலையுதிர்காலம் டிரைலர் வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் பேசியது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என ராதாரவி கூறினார்.

அவர் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியிருப்பதாக கூறி, தி.மு.க. மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. நடிகர் சங்கமும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தது.

ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது என்று தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது டுவிட்டரில் இது பற்றி கூறுகையில், பெண்ணுரிமை முன்னிறுத்தும் தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது.  கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.  மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி பேசும்பொழுது, நான் எதற்கு பயப்பட வேண்டும்.  நான் நடிப்பதை நிறுத்த நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய அவர், கட்சியிலிருந்து என்னை நீக்கலாம், ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாக இருப்பேன் என பேசியுள்ளார்.

Next Story