திருமணத்துக்கு பின்பு சமந்தா வாழ்க்கையில்..


சமந்தா
x
சமந்தா
தினத்தந்தி 14 April 2019 6:32 AM GMT (Updated: 14 April 2019 6:32 AM GMT)

மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுகிற நட்சத்திரங்களில், சமந்தாவும் ஒருவர். திருமணத்துக்கு முன்பும், பின்பும் சமந்தாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை அவர் மனம் திறந்து சொல்கிறார்:

“திருமணத்துக்கு பிறகு எனக்கு ஒருவித மன அமைதி கிடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பு, நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் நானே ‘மானிட்டரிங்’ செய்து பார்ப்பேன். ‘நான் நன்றாக நடித்திருக்கிறேனா?’ என்று எனக்கு நானே ஆராய்ந்துவிடுவேன். திருமணத்துக்கு பிறகு எனது கணவர் நாக சைதன்யா நடிக்கும் காட்சிகளையும் ‘மானிட்டரிங்’ செய்கிறேன். உரிய ஆலோசனையும் வழங்குகிறேன்.

‘இதையெல்லாம் பார்த்து ஏன் நீ கஷ்டப்படு கிறாய். டைரக்டர் அதை பார்த்துக்கொள்வார்’, என்று என் கணவர் சிரித்தபடியே என்னிடம் கூறுவார். ஆனாலும் என் கடமையில் இருந்து நான் தவற மாட்டேன். மனைவியின் பொறுப்பு கணவரை பார்த்து கொள்வதுதான்.

திருமணம் ஆன பின்பு எங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டோம். நாங்கள் இருவருமே முன்னணி பிரபலங்கள். எங்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. எங்கள் மீதான ரசிகர் களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. எனவே அதை ஈடுசெய்யக்கூடிய, மிகச்சிறந்த கதையம்சம் கொண்ட, தரமான கதை கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஜோடியாக நடிப்பது என்று முடிவு எடுத்திருந்தோம்.

இந்த சூழ்நிலையில்தான் தரமான கதையுடன் டைரக்டர் சிவா எங்களை அணுகினார். அதுதான் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘மஜிலி’. அதில் நாங்கள் மீண்டும் கணவன்-மனைவியாக நடித்திருக்கிறோம். படத்தின் கதை கணவன்-மனைவியை தாண்டி குடும்பத்தில் உள்ள அத்தனை நபர்களின் இதயத்தையும் வருடி செல்கிற கதையாகும். சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை.

நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாக சைதன்யா ஒரு படத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நான் பாராட்டுவேன். அதேசமயத்தில் அவர் எதிர்பார்த்த அளவு நடிக்கவில்லை என்றால் திட்டி தீர்த்துவிடுவேன். நான் நடிக்கும் படத்துக்கு ஒருமுறை ஒப்புக்கொண்டால் போதும், அந்த கதையில் எந்த சூழ்நிலையிலும் எனது தலையீடு இருக்காமல் கவனமாக பார்த்து கொள்வேன். அதேவேளை கதை பிடிக்கவில்லை என்றால் அதில் எத்தனை முறை மாற்றம் செய்து வந்தாலும் பிடிவாதமாக மறுத்துவிடுவேன். இதுதான் எனது கொள்கை. பிடிக்காத விஷயத்தில் எப்போதுமே என்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டேன்.

எனது திரை உலக பயணத்தில் ஒரு இலக்கை அடைந்துவிட்டேன். சினிமா தேர்வுகளில் எனது முக்கியத்துவம் முன்பை விட மாறிவிட்டது. ஐந்தாறு படங்களில் மாறி மாறி நடிப்பதை விட, நடிப்பதற்கு வாய்ப்புள்ள, பெயரும் புகழும் தருகிற தரமான ஒரு படத்தில் நடித்தால் கூட போதும்.

தற்போது சமூக வலைத்தளங் களில் என்னை பற்றி வரும் விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு வருகிறேன். எதையும் எளிதாகவே எடுத்து கொள்கிறேன். நான் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஒரு சுதந்திரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனை சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். நடிக்கும்போது சக நடிகருடன் தொடுவது, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பது என எல்லாவற்றையும் தொழில் ரீதியாக மட்டுமே பார்க்கிறோம், செய்கிறோம். என் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்துவதுதான் என் வேலை. ஏனென்றால் நான் ஒரு நடிகை. நடிக்காமல் எப்படி இருக்க முடியும்?

சினிமாவும், நிஜ வாழ்க்கையும் வேறு வேறு. நிஜ வாழ்க்கையில் நான் எப்போதுமே உணர்ச்சிவசப்பட மாட்டேன். சோர்வடைய மாட்டேன். ‘மஜிலி’ படத்தில் நடித்தபோது சில காட்சிகளில் ‘கிளிசரின்’ இல்லாமல் நிஜமாகவே அழுதுவிட்டேன். ஒவ்வொரு காட்சியிலும் இனி ‘கிளிசரின்’ இல்லாமல் நடிக்க வேண்டும் என்று எனக்குள்ளேயே தீர்மானித்து இருக்கிறேன். இதை கூட செய்ய முடியாவிட்டால், நான் என்ன நடிகை? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இப்போதெல்லாம் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் அதிகம் வரத்தொடங்கி உள்ளன. இது நல்ல பரிமாணத்துக்கு அடையாளம். எனக்கு விளையாட்டு வீராங்கனையாக ஒரு படத்திலாவது நடிக்க ஆசை. அதேவேளை மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை உண்டு. என்னிடம் இருக்கும் ஒரு குறைபாடு என்னவென்றால், கதை கேட்கும்போது நான் சோம்பேறி ஆகிவிடுகிறேன். கதை சொல்ல ஆரம்பித்தாலே போதும். எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அதைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தற்போது ஓய்வின்றி நான் நடித்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ஓய்வு எடுத்தால் போதும், உடனே சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தற்போது, ‘96’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. என் நடிப்பில் உருவான ‘ஹே பேபி’ படமும் திரைக்கு வர இருக்கிறது” என்கிறார்.

Next Story