சமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்


சமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக நடிகை பூனம் கவுர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.


தமிழில் நெஞ்சிருக்கும்வரை, பயணம் என்வழி தனி வழி, 9 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். பூனம் கவுர் சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்தார். எனது தாயை அழைத்துக்கொண்டு அவரது அலுவலகம் சென்றது பிடிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார் என்றார். பூனம் கவுரும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. நடிகை ஸ்ரீரெட்டியும், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பவன் கல்யாணும், பூனம் கவுரும் பேசுவது போன்ற ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பூனம் கவுருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.

பூனம் கவுர் நிருபர்களிடம் கூறும்போது, “தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆடியோ உரையாடலை பரப்பி வருகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது” என்றார்.

Next Story