ஆங்கில-தமிழ் படங்களுக்கு பாகுபாடா? தியேட்டர் அதிபருக்கு நடிகர் விஷால் கேள்வி


ஆங்கில-தமிழ் படங்களுக்கு பாகுபாடா? தியேட்டர் அதிபருக்கு நடிகர் விஷால் கேள்வி
x
தினத்தந்தி 26 April 2019 10:15 PM GMT (Updated: 26 April 2019 5:37 PM GMT)

நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கில படத்துக்கு கொடுக்கும் அறிவிப்பு தமிழ் படங்களுக்கும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் படங்கள் வரிசையில் தயாரான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது. அவெஞ்சர்ஸ் படங்களில் இது கடைசி பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு டிக்கெட் முன்பதிவில் சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்த படத்தின் தமிழ் பதிப்பு 2 நாட்களுக்கு முன்பே இணைய தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. இதுவரை தமிழ் படங்கள்தான் இணையதளங்களில் வெளியாகி வந்தன. இப்போது அவெஞ்சர்ஸ் படத்தையும் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியிட்டு ஹாலிவுட்டை அதிர வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தியேட்டர் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் “திரையரங்கில் யாரும் அவெஞ்சர்ஸ் படத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரக்கூடாது. போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு படத்தை ரசியுங்கள். படம் பற்றிய தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடாதீர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஆங்கில படத்துக்கு கொடுக்கும் இந்த அறிவிப்பு வாராவாரம் திரைக்கு வந்து குவியும் தமிழ் படங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள திரையரங்கு உரிமையாளர் திருட்டு வி.சி.டி.யை நாங்கள் ஊக்குவிப்பது இல்லை. எங்களுக்கு மொழி தடையில்லை” என்று கூறியுள்ளார்.

Next Story