காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’


காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’
x
தினத்தந்தி 27 April 2019 4:26 AM GMT (Updated: 27 April 2019 4:26 AM GMT)

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம்

2019-ம் ஆண்டின் முதல் காலாண்டை தாண்டி விட்டோம். இந்த வருடம் இதுவரை உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட யுரி, கேஸரி போன்ற பல படங்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ‘கல்லி பாய்’. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருப்பது தான் இந்தப் படத்திற்கு கிைடத்த வெற்றி.

ரன்வீர் சிங்-ஆலியா பட் நடிப்பில் சோயா அக்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கல்லி பாய். இந்த படத்தில் ரன்வீர், ‘முராத்’ என்னும் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் என்று கூறுவதை விட அவர் ராப் பாடகராகவே மாறி விட்டார் என்று கூறினால் சாலச் சிறந்ததாக இருக்கும். இசை சம்பந்தமான கதையமைப்பைக் கொண்ட இந்த படத்தில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு பாடல்கள் உள்ளன. இந்த படத்தில் ரன்வீர் ஏழு பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த படம் எமினமின் ‘8 மைல்’ படத்தின் காப்பி என்று ஆரம்பத்தில் விமர்சனம் எழுந்தது. ஆனால் இது எமினமின் கதை இல்ைல. சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனின் கதை. இது ‘டிவைன், நாஸி’ என்னும் ராப் சிங்கர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. டிவைன்னின் கதாபாத்திரத்தில் தான் முராத் ஆக ரன்வீர் நடித்திருக்கிறார்.

படத்தில் அனைவரையும் ஈர்த்த கதாபாத்திரம் எம் சி ஷேர். உண்மையான ராப் பாடகர் தான் படத்தில் நடித்திருக்கிறார் என்று பக்கத்து சீட்டில் இருப்பவரின் காதுகளை பலர் கடிக்கும் அளவிற்கு தனது பங்களிப்பை அளித்திருந்தார் சித்தாந்த் சதுர்வேதி. அவர் இதற்கு முன் இன்சைட் எட்ஜ் என்னும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தொடரிலும், லைப் ஷாய் ஹாய் என்னும் டெலிவிஷன் தொடரிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே சென்ற ஆண்டின் கடைசியில் இருந்து வெளிநாடுகளில் பட விழாக்களில் திரையிடப்பட்டிருந்தது. அப்பொழுதே இந்த படம் விருதுக்கான படம் என்று பலர் வாழ்த்தியிருந்தனர்.

சோயா அக்தர் தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சிறிது பிசகியிருந்தாலும் ஒரு சாரருக்கான படமாக மாறிபோகியிருக்கக் கூடிய கதை இது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் சோயா அக்தர்.

படத்திற்கு பாடல்களும் இசையும் பெரிய பலம். பல இசையமைப்பாளர்கள் படத்திற்கும் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கின்றனர். படம் முடிந்த பின்னர் ஒவ்வொருவரின் காதுகளில் ஒலித்தும் வாய் முணு முணுத்தும் கொண்டிருப்பது ‘‘அப்னா டைம் ஆயேகா (எங்களுக்கும் காலம் வரும்)’’ பாடல். இந்த பாடலை எழுதிய ‘டிவைன்’ தனது வலிகளை வரிகளாக்கி உள்ளார். ‘நிச்சயம் டிவைன் இது உங்களது காலம் தான்’

படத்தின் ஆரம்பத்தில் தனது நண்பன் கார் ஒன்றை திருடும் போது அது தவறு என்று அறிவுறுத்துகிறார் முராத். தன் நண்பன் செய்யும் ஒவ்வொரு தவறையும் குத்தி காட்டி தட்டியும் கேட்கிறார். இந்த இடத்தில் இருந்து இது தான் செய்ய முடியும் என்று நண்பேனா தன் தரப்பை நியாயப் படுத்திக் கொள்கிறார்.

தான் செய்யும் தவறுகளுக்கு அந்த பகுதி சிறுவர்களை வைத்து வேலை வாங்கிக் கொள்கிறார் முராத்தின் நண்பர். ஆனால் முராத்தோ அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதை விட சூழ்நிலைக்கு பயன்படுவதே சிறந்தது என்று முராத் கதாபாத்திரம் உணர்த்துகிறது.

மறுமணம் செய்து கொண்டு முதல் மனைவியையும், முதல்மனைவியின் பிள்ளைகளையும் அடிமைகள் போல் நடத்தும் தந்தை; பின்பகுதியில் தன்மகனைக் கண்டு கண்கலங்குவது என படத்தின் பல இடங்களில் காட்சிமொழி, வசனங்களைத் தாண்டியும் சத்தமாக பேசுகிறது.

படத்தில் ஹீரோவிற்கு சண்டை கிடையாது. ஏனென்றால் அதை ஆலியா பட் பார்த்துக் கொள்கிறார். துணிச்சலும், வேகமும் புதுமையும் கலந்த ஸபினா கதாபாத்திரத்தில் ஆலியா பளிச். தன்னை பெண் பார்க்க வந்தவர் சமைக்க தெரியுமா என்று கேட்பதற்கு ‘உங்களுக்கு எதிர்காலத்தில் லிவர் மாற்ற வேண்டியது வந்தால் அதை செய்யத்தெரியும்’ என்று ஸபினா கூறும் இடம் அல்டிமேட்.

இது போன்ற கதைகள் தமிழில் பல வந்துள்ளன. இந்திய அளவிலும் பலமுறை பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதை கருவை கொண்ட இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதற்கு கதையைத் தவிர்த்து காட்சிகளில் காரணம் இருக்கின்றது. தாராவி குடிசைப் பகுதியில் இருந்து ஒரு இளைஞன் கனவுகளுடன் வாழ்வில் முன்னேற முயற்சிக்கும் கதைகளில் அரசியலை அள்ளி தூவியிருப்பார்கள்; இந்த படம் அது போல் அல்லாதது தான் இதன் தனித்துவ அடையாளம். இருளில் இருப்பது தவறு செய்வதற்கு ஏதுவானது என்று அல்லாமல் வெளிச்சத்தை நோக்கி சென்று அடுத்த சந்ததியினரை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருப்பது தான் படத்தின் உண்மையான வெற்றி.

2019 ஆண்டின் முதல் காலாண்டில் வெளியான பாலிவுட் படங்களில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் குவித்தது கல்லி பாய் தான். அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இது முன்னணியில் உள்ளது. ரசிகர்கள் பெரிய ஸ்டார்களைத் தாண்டி நல்ல கதைகளை ஆதரிக்கத் தவறுவதில்லை என்பதை கல்லி பாய் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.


Next Story