சினிமா செய்திகள்

கவர்ச்சி வெடிகுண்டுவின் இருட்டு வாழ்க்கை ரகசியங்கள் + "||" + Glamorous Bomb life's at dark secrets

கவர்ச்சி வெடிகுண்டுவின் இருட்டு வாழ்க்கை ரகசியங்கள்

கவர்ச்சி வெடிகுண்டுவின் இருட்டு வாழ்க்கை ரகசியங்கள்
சன்னி லியோனின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இணையதள தொடர் ‘கரன்ஜித் கவுர்- சன்னி லியோனின் சொல்லப்படாத கதை’.
கவர்ச்சி வெடிகுண்டு சன்னி லியோனின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இணையதள தொடரான (வெப் சீரிஸ்) ‘கரன்ஜித் கவுர்- சன்னி லியோனின் சொல்லப்படாத கதை’, ஒளிபரப்பான வேகத்திலே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் இந்தத் தொடருக்காக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்ததும், மீண்டும் அத்தருணங்களை நடிப்பில் கொண்டு வந்ததும் எளிதானதாக இல்லை, இதற்கான படப்பிடிப்பின்போது சிலவேளைகளில் தான் கண்ணீர்விட்டு அழக்கூட செய்தேன் என் கிறார், சன்னி லியோன்.

‘‘என் வாழ்வின் சில இருண்ட அத்தியாயங்களை திரும்பிப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமானது. அந்நாட்களில் அவற்றை கெட்டகன வாகக் கருதி, விரைவிலேயே முடிந்து விடும் என்று தான் நான் நம்பிக் கொண்டிருந்தேன். எனது தாயார் இறந்தபோது, எனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவிலேயே அவரும் மறைந்து விட்டார். எனக்குத் திருமணம் நடந்தது, ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப்பட்டேன்... இப்படி பல்வேறு நிகழ்வுகள் படபடவென்று நடந்தன.

நான் சந்தித்த சில அனுபவங்கள் நிஜமாகவே கசப்பானவை, வலியானவை. அவற்றை நான் மீண்டும் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை, அந்த நினைவுகளை எனக்குள் கொண்டுவர விரும்பவில்லை. எனவே, வெப் சீரிஸ் படப்பிடிப்பின்போது நான் பலமுறை கதறி அழுதேன். அதைப் பார்த்து என் கணவர் டேனியல் (வெப்பர்) மிகவும் கலங்கி விட்டார், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். எனது அந்த அத்தியாயங்களுக்கு பாவம் அவரென்ன செய்வார்? அடுத்தடுத்து எனது பெற்றோரை இழந்ததுதான் என் வாழ்வின் பெரும் சோகம்’’ என்று சொல்பவரிடம், ஆனாலும் பழைய நினைவுகளைக் கிளறும் வெப் சீரிசில் நடிக்கச் சம்மதித்தது ஏன் என்று கேட்டால்...

‘‘இந்தத் தொடரில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொண்டதற்கு ஒரே காரணம், என் வாழ்வில் நிஜமாக என்ன நடந்தது என்பதை எல்லோரும் அறியும்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், அசிங்கமானதாகக் கூட இருக்கலாம். எல்லோருடைய வாழ்க்கையும் ரோஜாக்களும் சாக்லேட்களும் நிறைந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்’’ என்கிறார், தெளிவாக.

‘‘நான் இந்தி திரை உலகத்தை பற்றி இப்போதுதான் தெரிந்திருக்கிறேன். நான் இங்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் நடித்த சில படங்கள், நான் ஒரு மலை அடிவாரத்தில் நிற்பதைப் போன்ற தனிமை உணர்வை ஏற்படுத்தின. இங்கே நிறைய குழப்பம், குளறுபடி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக திரையமைப்பு, நன்றாகப் பராமரிக்கப்படும் எந்திரம் போலத்தான் தோன்றுகிறது. இங்கு எப்படியோ வேலை முடிந்து விடுகிறது. திரையுலகில் நான் காலடி எடுத்து வைத்தபோது, நாங்கள் திட்டமிடுவது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்க, எனக்குப் பைத்தியம் பிடிப்பது போலாகி விட்டது.

ஆனால் இப்போது எல்லாவற்றையும் அமைதியாக இருந்து கிரகிக்க கற்றுக்கொண்டு விட்டேன். இன்றைய திரையுலகம் என்னைக் கவர்கிறது. இங்கே நான் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதாவது, ‘அலட்டிக்கொள்ளாமல் இரு. எல்லாம் அதனதன் வேகத்தில் தன்னால் நடக்கும்’ என்பதுதான் அது’’ - சலனமின்றிச் சொல்கிறார், சன்னி லியோன்.

நடிகை என்பதில் இருந்து அடுத்த அவதாரமாக தயாரிப்பாளராகவும் ஆகிறார், சன்னி லியோன். அதைப் பற்றி அவர் அதிகம் பேச விரும்புவதில்லை.

‘‘எனது நிறுவனத்தின் சார்பில் நான் தயாரிக்கப்போகும் படத்தைப் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்’’ என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்.

கனடாவில் அதிக காலத்தைக் கழித்த சன்னி லியோன் தற்போது இந்தியை எந்த அளவு கற்றுக்கொண்டிருக்கிறார்?

‘‘இப்போது என்னால் சரளமாக இந்தி பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும். எனது உச்சரிப்பில் கொஞ்சம் அமெரிக்கச் சாயல் தெரியும். ஆனால் நம்புங்க, நானும் இ்ந்த நாட்டுப்பொண்ணுதான்’’ என்று சிரிக்கிறார்.

இந்தியாவில் இவர் எதிர்கொண்ட பெரிய பிரச்சினை எது என்ற கேள்விக்கு,

‘‘இங்கு நிலவும், மேலே உள்ளவர்கள்- கீழே உள்ளவர்கள் என்ற மனோபாவம்தான் எனக்குப் பிரச்சினையாக இருந்தது. காரணம் நான் அப்படி வளர்க்கப்படவில்லை. அந்த மாதிரி எந்த விஷயமும் என் மண்டைக்குள் ஏறியதில்லை. ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அம்மாதிரியான வித்தியாசமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகத்தில் எல்லோரும் எனக்கு ஒரே மாதிரி சமமானவர்கள்தான். நீங்கள் மேல்தட்டில் இருக்கிறீர்களா, கீழ்தட்டில் இருக்கிறீர்களா என்பதெல்லாம் எனக்கு ஒரு விஷயமில்லை. இதில் நான் யாரையும் புகார் செய்யவில்லை. இப்படி ஒரு நடைமுறை இருப்பது சரியல்ல என்றுதான் கூறுகிறேன்.

அப்புறம், வெளிநாட்டுக்கும் நம் நாட்டுக்கும் நிறைய கலாசார வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் தாமதமாகத்தான் நானும் என் கணவரும், இந்தியாவில் எப்படி மக்களை அணுகுவது, பேசுவது, எந்த எல்லையுடன் நின்று கொள்வது என்றெல்லாம் கற்றுக்கொண்டோம். அடிப்படையில் இது, கலாசார வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சிதான்’’

தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, வாடகைத் தாய் மூலம் பெற்ற இரட்டை ஆண் குழந்தைகள் ஆக, மூன்று குழந்தைகளின் அம்மாவாகி இருக்கும் சன்னி லியோன், தனது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஒரு எல்லையை வகுத்திருப்பதாக கூறுகிறார்.

‘‘எனது மகன்கள் இருவரும் ரொம்ப குட்டிப் பசங்க. ஆனால் மகள் நிஷாவுக்கு இரண்டரை வயது. அவள் ஓவியம் தீட்டுவதில் கொஞ்சம் ஆர்வம் காட்டுகிறாள். அவள் தூரிகையை பிடித்திருக்கும் விதம், கவனிக்கும் விதம், பல்வேறு வண்ணங்களைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் எல்லாமே அபாரமாக இருக்கின்றன. தற்போது அவளுக்காக ஓவிய ஆசிரியர் ஒருவரை நியமித்து இருக்கிறோம். அவர் வீட்டுக்கு வந்து அவளுக்கு கற்றுக்கொடுக்கிறார்.

ஓவியத்தில் நிஷாவுக்கு ஈடுபாடு தெரிந்தாலும், அதில் அவள் சிறப்புப் பெற வேண்டும், ஓவியராக வேண்டும் என்றெல்லாம் நாங்கள் கஷ்டப்படுத்தவில்லை. அவளுக்கு விருப்பமான விஷயத்தைச் செய்யும், அறிந்து கொள்ளும் வாய்ப்பைத்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்’’ என்று புன்னகை மிளிர தாய்மை உணர்வுடன் சொல்கிறார், சன்னி லியோன்.