சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அந்த படத்தில் அஜித்குமார் வழக்கறிஞராக நடிக்கிறார்!

***

நயன்தாராவையும், அஞ்சலியையும் ஒப்பிட முடியுமா? (ஆர்.புவன், சென்னை–87)

நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். அஞ்சலி ஆந்திராவை சேர்ந்தவர். நயன்தாராவை (தற்போது) காதல்வசப்படுத்தியவர், டைரக்டர் விக்னேஷ் சிவன். அஞ்சலியை காதல்வசப்படுத்தியவர் நடிகர் ஜெய். நயன்தாராவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். அஞ்சலி அழகில் மயங்கியவர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் மட்டும் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஓட்டெடுப்பு நடத்தினால், நயன்தாரா ஜெயித்து விடுவார்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறை ராதிகா சரத்குமார் படமாக்குவது உண்மையா? (ரா.அழகுராஜா, காஞ்சிபுரம்)

அது, எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு அல்ல. எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு. தனது தந்தையின் வாழ்க்கை வரலாறை ராதிகா சரத்குமார் ஆவண படமாக தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த ஆவண படத்தில், எம்.ஜி.ஆரின் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது!

***

சிம்புவுக்கும், தனுசுக்கும் இடையே நடிப்பு போட்டி வைத்தால்...? (பி.செண்பகமூர்த்தி, தஞ்சை)

போட்டி கடுமையாக இருக்கும். வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்!

***

குருவியாரே, ஸ்ரீதிவ்யாவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வராமல் போனதற்கு என்ன காரணம்? (கே.சின்னதுரை, உடுமலைப்பேட்டை)

புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பம் ஸ்ரீதிவ்யாவுக்கு புரியவில்லையாம்!

***

சந்தானம் ஜோடியாக நடித்த ஆஷ்னா சவேரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? அவர் எங்கே வசிக்கிறார்? (எஸ்.பாபு, மன்னார்குடி)

ஆஷ்னா சவேரி, மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். அவர் இப்போது மும்பையில் வசித்து வருகிறார்!

***

குருவியாரே, விஜய், அஜித், விக்ரம் ஆகிய மூவரில் வயதில் மூத்தவர் யார்? (வெற்றிவேல், குன்றத்தூர்)

விஜய்யை விட வயதில் மூத்தவர், அஜித். அஜித்தை விட வயதில் மூத்தவர், விக்ரம்!

***

திரைப்படங்களுக்கும், வெப் சீரியல்களுக்கும் என்ன வித்தியாசம்? (ஆர்.வி.சுவாமிநாதன், பெருங்களத்தூர்)

திரைப்படங்களுக்கு தணிக்கை உண்டு. வெப் சீரியல்களுக்கு தணிக்கை கிடையாது. அதனால், ஆபாச வசனங்களும், கெட்ட வார்த்தைகளும் வெப் சீரியல்களில் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன!

***

குருவியாரே, விஜய் சேதுபதி–தமன்னா, உதயநிதி ஸ்டாலின்–தமன்னா ஆகிய 2 ஜோடிகளில், பொருத்தமான ஜோடி எது? (ஏ.முரளிராமன், ஸ்ரீரங்கம்)

விஜய் சேதுபதிக்கு ரம்யா நம்பீசன் பொருந்திய அளவுக்கு தமன்னா பொருந்தவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு ஹன்சிகா பொருந்திய அளவுக்கு தமன்னா பொருந்தவில்லை!

***

சூர்யா நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் எது? (சி.ரவீந்திரன், கிருஷ்ணகிரி)

சூர்யா நடித்த ‘என்.ஜி.கே.,’ ‘காப்பான்’ ஆகிய 2 படங்களும் முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. எந்த படம் முந்தும்? என்பது விரைவில் தெரிந்துவிடும்!

***

குருவியாரே, அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க,’ ‘தடம்’ ஆகிய 2 படங்களை இயக்கிய மகிழ்திருமேனி, எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் அடுத்து இயக்கும் படம் எது? (கா.முல்லை வேந்தன், பணகுடி)

மகிழ்திருமேனிக்கு பாதி இலங்கை. பாதி இந்தியா! இரண்டு நாடுகளும் சேர்ந்த கலவை, மகிழ்திருமேனி. அவர் அடுத்து இயக்கும் படத்துக்காக, கதை விவாதம் நடத்தி வருகிறார்!

***

சமந்தா அறிமுகமான படம் எது, மற்ற கதாநாயகிகளில் இருந்து அவர் எப்படி வேறுபடுகிறார்? (பி.பாலமுருகன், மதுராந்தகம்)

சமந்தா அறிமுகமான படம், ‘பாணா காத்தாடி.’ எந்த கதாபாத்திரத்துக்கும் பொருந்துகிற முக அமைப்பை கொண்டவர், அவர்!

***

குருவியாரே, ரஜினிகாந்தும், மீனாவும் இணைந்து நடித்த படங்கள் என்னென்ன? (கே.அகமது செரீப், கோவை)

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா சிறுமியாகவும், ரஜினிகாந்த் நடிகராகவும் நடித்து இருந்தார்கள். எஜமான்,’ ‘முத்து,’ ‘வீரா’ ஆகிய மூன்று படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்!

***

நயன்தாரா நடித்த ‘ஐரா’ வெற்றி படமா அல்லது தோல்வி படமா? (டி.ஜேக்கப், தூத்துக்குடி)

‘ஐரா,’ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

***

குருவியாரே, பேய் வேடங்களில் பல நடிகைகள் மிரட்டியிருக்கிறார்கள். அதிகமாக பயமுறுத்திய நடிகை யார்? (எம்.சதீஷ்காந்த், பட்டுக்கோட்டை)

பேய் வேடத்தில் அதிகமாக பயமுறுத்தியவர், ஜோதிகா! படம், சந்திரமுகி. இவர் மிரட்டிய அளவுக்கு வேறு எந்த நடிகையும் மிரட்டவில்லை. பலர் சிரிப்பு பேய்களாக வந்ததால், பேய் பயமே போய்விட்டது!

***

வடிவேல் இடத்தை நிரப்பும் தற்போதைய நகைச்சுவை நடிகர் யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

வடிவேல் இடத்தை கொஞ்ச காலமாக சந்தானம் நிரப்பி வந்தார். அவர் கதாநாயகனாக மாறியபின், நகைச்சுவை வேடங்களில் நடிப்பதில்லை. சந்தானம் விட்ட இடத்தை சூரி நிரப்பி வந்தார். இப்போது அந்த இடத்தை யோகி பாபு நிரப்பி வருகிறார்!

***

குருவியாரே, அழகும், இளமையும் மிகுந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எப்படி? (இரா.செண்பக பாண்டியன், மதுரை)

‘மகாநதி’ (தெலுங்கு) படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நடிப்பிலும் சிறந்தவர் என்ற பெயரை வாங்கி விட்டார்!

***

‘குத்து’ பாடல்கள் மூலம் பிரபலமான ஸ்ரீகாந்த் தேவா இதுவரை எத்தனை படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்? (ஜி.ராம்குமார், சேலம்)

ஸ்ரீகாந்த் தேவா குத்து பாடல்களுக்கு மட்டுமல்ல...மென்மையான ராகங்களை கொண்ட பல பாடல்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைப்பில், 100 படங்களை நெருங்கி விட்டார். அவருடைய 100–வது படமாக, ‘பிரியமுடன் ப்ரியா’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, ‘காஞ்சனா’ 1, 2, 3 என மூன்று பாகங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் 4–வது பாகத்தையும் எடுப்பாரா? (ஆர்.சுதர்சன், கடையநல்லூர்)

மூன்றாம் பாகம் வெற்றி பெற்றால், நான்காம் பாகத்தை எடுப்பார். சிரிப்பு பேய்களை அவர் அவ்வளவு சுலபத்தில் கைவிட மாட்டார்!

***

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கொலைகாரன்’ படம் எப்போது திரைக்கு வரும்? (கோ.மெய்யப்பன், புதுச்சேரி)

‘கொலைகாரன்’ படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது!

***