தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் செயற்குழு கூட்டம் முடிந்ததும் நாசர் பேட்டி


தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் செயற்குழு கூட்டம் முடிந்ததும் நாசர் பேட்டி
x
தினத்தந்தி 28 April 2019 11:38 PM GMT (Updated: 28 April 2019 11:38 PM GMT)

தேர்தல் குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிகாலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அந்த அவகாசமும் முடிந்துள்ளதால் தேர்தல் குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், டி.பி.கஜேந்திரன், பூச்சி முருகன், ஸ்ரீமன், உதயா, ஹேமச்சந்திரன், ஜூனியர் பாலையா, அஜய்ரத்னம், ரமணா, குட்டி பத்மினி, லலிதாகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கூட்டம் முடிந்ததும் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“எங்கள் நிர்வாகத்தின் பணிகள் மகிழ்ச்சியாகவும் சட்டரீதியாகவும் முடிந்து இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு அவரது ஆலோசனையின் பேரில் தேதி அறிவிக்கப்படும். சட்ட ரீதியாக அதற்கான பணிகள் செய்யப்படும்.

தேர்தல் நடத்துவதற்கான இடம், தேதி, நேரம் போன்ற விவரங்களை தேர்தல் அதிகாரி வெளியிடுவார். இன்று முக்கியமான தீர்மானமாக அதைத்தான் நிறைவேற்றி உள்ளோம். விரைவில் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார். அதற்கான அதிகாரம் நிர்வாக குழுவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தில் பொறுப்பு ஏற்றபோது நாங்கள் அளித்த 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.’‘ இவ்வாறு நாசர் கூறினார்.

சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் கூறும்போது, “நடிகர் சங்க தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரி ஒருவாரத்தில் நியமிக்கப்பட்டு தேர்தல் தேதியை முடிவு செய்வார். நடிகர் சங்க கட்டிட பணிகள் விரைவில் முடிந்துவிடும். தேர்தலில் நாங்கள் மீண்டும் போட்டியிடுவோம்” என்றார்.

Next Story