ரூ.800 கோடி செலவில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் புதிய மாற்றம்


ரூ.800 கோடி செலவில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் புதிய மாற்றம்
x
தினத்தந்தி 3 May 2019 11:30 PM GMT (Updated: 3 May 2019 6:54 PM GMT)

அரச குலத்தில் நடந்த நிகழ்வுகளை வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.

சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் அரச குலத்தில் நடந்த நிகழ்வுகளை வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.

இந்த படத்தில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இதற்கான நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் தேர்வாகி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கவும், பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் மணிரத்னம் திட்டமிட்டு உள்ளார். சரித்திர காலத்து அரண்மனை அரங்குகள், ஆடை ஆபரணங்களையும் பயன்படுத்துகின்றனர். இரண்டு பாகங்களையும் படமாக்க ரூ.800 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்‌ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் இப்போது தயாரிப்பில் மாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட்ஜெட்டை கேட்டு லைகா பட நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தயாரிப்பாளராக சேர்க்க மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story