சினிமா செய்திகள்

மஞ்சிமா மோகனின் ‘சென்னைக் காதல்’ + "||" + 'Fear is Muludayata' heroine Manjima Mohan is the actress of Kerala.

மஞ்சிமா மோகனின் ‘சென்னைக் காதல்’

மஞ்சிமா மோகனின் ‘சென்னைக் காதல்’
‘அச்சம் என்பது மடமையடா’ கதாநாயகி மஞ்சிமா மோகன் கேரள நடிகை.
சென்னை நகரத்தை பற்றியும், இங்குள்ள மக்களை பற்றியும் புகழ்ந்துதள்ளு கிறார். அவரது புகழ்ச்சியையும், அதற்கு காரணமான விஷயங்களையும் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..!

வெயில் அடிக்கத் தொடங்கும்போதே சென்னை நகரில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும். தமிழ், மலையாளம், பெங்காலி, தெலுங்கு போன்று பல மொழி பேசும் மக்களும் அந்த சூட்டில்தான் வாழ்க்கை பரீட்சையை தொடங்குகிறார்கள். அதிர்ஷ்டத்தை விரும்புகிறவர்கள் வந்துசேரவேண்டிய இடம் இது.

நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்தேன். அங்கு உலக அனுபவத்தோடு, சுதந்திரமாக வாழவும் கற்றுக்கொண்டேன். இங்குள்ளவர்கள் எதையும் நேரடியாக எதிர்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். இங்குதான் நான் பஸ்சிலும், மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்து தெரிந்துகொண்டேன். தியேட்டருக்கு சென்று முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்ப்பேன். பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு ரெயில்வே பிளாட்பாரத்தில் போய் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.

சென்னை மக்களை ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கு பிடிக்க விஷயம் இருந்தால் அதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்தால் நிறைய அன்பு செலுத்துவார்கள். இங்கு பெண்களுக்கு மரியாதை அதிகம். கல்லூரிக்கு பஸ்சில் போகும்போது வயதானவர்கள்கூட எழுந்து, ‘நீங்க உட்காருங்கோ..’ என்று சொல்வார்கள். நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால், முன்பின் தெரியாதவர்கள்கூட திரண்டு வந்து சுவர்போல் நின்று காப்பாற்றுவார்கள். நாங்கள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது எனது தோழி ஒருத்தியிடம், ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தார். நான் தட்டிக்கேட்பதற்குள் அங்கே நிறைய பேர் கூடி, அந்த நபரை ஒரு வழிபண்ணிவிட்டார்கள்.

சென்னை என்றாலே எனக்கு மறக்க முடியாத இரண்டு விஷயங்கள் நினைவுக்குவரும். அதில் ஒன்று பில்டர் காபி. அதை குடிப்பதற்காக இரவு இரண்டு மணிக்குகூட வெளியே செல்வேன். சத்யம் தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே சினிமா பார்ப்பேன். நான் நயன்தாரா நடித்த சினிமாக்களை முதல் நாளே பார்த்துவிடுவேன். நான் அவரது ரசிகை என்பது அவருக்கு தெரியும். நாங்கள் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம். அவர் எனக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

பெண்கள் தங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்ல தேவையான சுதந்திரத்தை சென்னை நகரம் தருகிறது. தப்பை, தப்பு என்று சொல்லும் துணிச்சலை எனக்கு இந்த நகரம்தான் தந்தது. சினிமாவில் ஆணாதிக்கும் குறைந்துகொண்டிருக்கிறது. ஆணாதி்க்கம் உச்சமாக இருந்தால் நயன்தாரா, திரிஷா, தமன்னா, மஞ்சுவாரியர் போன்றவர்களுக்கு நல்ல கதைகள் கிடைத்திருக்காது. பழைய ஆணாதிக்க நிலை இப்போது மாறிக்கொண்டிருக்கிறது.

எனது தந்தை விபின் மோகன் ஒளிப்பதிவாளராக இருந்து டைரக்டர் ஆனவர். அதனால் எல்லா திரை உலக பிரபலங்களும் என் தந்தையிடம் கதை சொல்ல வருவார்கள். நானும், என் அண்ணனும் குழந்தைகளாக இருந்தபோது அப்பா மாதம் மூன்று படங்களில்கூட பணிபுரிந்திருக்கிறார். வருடத்தில் சில முறைதான் அப்பாவை பார்ப்போம். அம்மாதான் எங்களை வளர்த்தார். பொய் சொன்னால், எதிர்த்து பேசினால் அம்மா அடிப்பார். நிறைய அடிவாங்கியிருக்கிறேன். நடிப்புத் தொழில்ரீதியான வாழ்க்கையில் அப்பாவின் தாக்கம் எனக்கு நிறைய உண்டு. காலை எழுந்தது முதல் இரவு வரை உள்ள எல்லா விஷயங்களையும் அப்பாவிடம் சொல்லிவிடும் வழக்கம் எனக்கு உண்டு.

கல்லூரி காலத்தில் லேசான அளவில் காதல் வந்தபோது, ‘இது படிக்கவேண்டிய காலம். இப்போது காதலிப்பது தப்பு’ என்றார்கள். இப்போது அவர்களே, ‘நீ என்ன, யாரையும் காதலிக்கவில்லையா?’ என்று கேட்கிறார்கள். இந்த பருவத்தில் சீரியசான ஒரு காதலில் போய் விழ என்னால் முடியவில்லை.