“பேய் படங்களை மக்கள் ரசிக்கிறார்கள்” - டைரக்டர் பாக்யராஜ்


“பேய் படங்களை மக்கள் ரசிக்கிறார்கள்” - டைரக்டர் பாக்யராஜ்
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 10:22 PM GMT)

பேய் படங்களை மக்கள் ரசித்து பார்ப்பதாக டைரக்டர் பாக்யராஜ் தெரிவித்தார்.


‘அகோரி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சித்து, சுருதி ராமகிருஷ்ணன், ஷாயாஷி ஷிண்டே, மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.எஸ்.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஆர்.பி.பாலா, சுரேஷ் கே.மேனன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாக்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தயாரிப்பாளர் பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். நான் ராம்சரண் நடித்த ‘மகதீரா’ என்ற படத்திற்கு மட்டும் தான் தமிழில் வசனம் எழுதினேன். மொழி மாற்று படங்களுக்கு வசனம் எழுதுவதில் நிறைய சவால்களும், கஷ்டங்களும் உள்ளன. டப்பிங் படத்துக்கு வசனம் எழுத தனி திறமை வேண்டும்.

‘அகோரி’ படத்துக்கு டைட்டில் பெரிய பிளஸ். பேயைப் பற்றி பலர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். பேய் வந்து பழிவாங்குகிறது என்று கருத்துள்ள படங்கள் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.

பேய் பற்றி படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் போல தான் அகோரியும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர்கள் அதனை நேர்மறையாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன். அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் பேசினார்கள்.


Next Story