“முதல் தடவையாக எனது படத்துக்கு யு சான்றிதழ்” - பட விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு


“முதல் தடவையாக எனது படத்துக்கு யு சான்றிதழ்” - பட விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 10:03 PM GMT)

முதல் தடவையாக தனது படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக பட விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.


எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள புதிய படம் ‘மான்ஸ்டர்’. பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. மான்ஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:-

“இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் நெருங்கிய உறவு இருக்கும். இந்த படத்தை எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். நெல்சன் நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது.

பிரியா பவானி சங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் நடித்து முதல் முறையாக தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’. வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்.” இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும் பேசினார்கள்.


Next Story