நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்


நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
x
தினத்தந்தி 9 May 2019 5:42 PM IST (Updated: 9 May 2019 5:42 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் பார்த்திபனிடம், உதவியாளராக பணிபுரிந்து வந்த ஜெயங்கொண்டான் என்பவர், தற்போது பார்த்திபன் இயக்கி வரும் "ஒத்த செருப்பு" எனும் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் நகைகள் காணாமல் போனதால், சில உதவியாளர்களை அவர் வேலையை விட்டு நீக்கியுள்ளார்.

ஆனால் ஜெயங்கொண்டான் அவரிடம் தொடர்ந்து பணி புரிந்து வந்த நிலையில், பார்த்திபனின் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை விற்பதற்காக, முன்பு வேலையை விட்டு நீக்கியவர்களை தான் அணுகியதாகவும், இதனை தவறாக புரிந்து கொண்ட பார்த்திபன், தன்னை தாக்கியதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் பார்த்திபன், தன் வீட்டில் நகை திருடு போன விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் ஜெயங்கொண்டான் தொடர்பு வைத்திருப்பதால் அவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் நகை திருட்டு குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாரிடம் ஜெயங்கொண்டானை விசாரிக்க தாம் புகார் அளித்துள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே தன் மீது பொய்யான புகாரை அளித்திருப்பதாகவும் கூறினார்.

Next Story