தயாரிப்பாளருடன் விமல் சமரசம் ‘களவாணி-2’ படத்துக்கு தடை நீங்கியது


தயாரிப்பாளருடன் விமல் சமரசம் ‘களவாணி-2’ படத்துக்கு தடை நீங்கியது
x
தினத்தந்தி 16 May 2019 4:15 AM IST (Updated: 16 May 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

களவாணி-2 படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

விமல் நடித்த களவாணி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர் சிங்கார வேலன் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார். இதை எதிர்த்து படத்தின் இயக்குனர் சற்குணம் வழக்கு தொடர்ந்து தடையை நீக்கினார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் சற்குணம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து சிங்கார வேலன் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விமல் மீது மோசடி புகாரும் கொடுத்தார். பின்னர் அவர் கூறும்போது, “களவாணி-2 படத்தின் காப்புரிமையை தருவதாக விமல் ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார். அதற்கான ரசீது என்னிடம் உள்ளது. அவற்றை போலீசில் ஒப்படைத்துள்ளேன். இப்போது களவாணி-2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். என்னை திட்டமிட்டு ஏமாற்றி உள்ளனர்” என்று கூறினார்.

இதனால் களவாணி-2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் விமலும், சிங்காரவேலனும் சந்தித்து பேசி சமரசம் செய்துகொண்டனர். இதுகுறித்து சிங்காரவேலன் கூறும்போது, “நான் கொடுத்த பணத்துக்கு ஈடாக 2019-ம் ஆண்டுக்குள் 2 படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளார். இதனால் வழக்கை வாபஸ் பெறுகிறேன்” என்றார். இதைத்தொடர்ந்து களவாணி-2 படத்துக்கான தடை நீங்கியது.

Next Story