சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, பிரபல கதாநாயகிகள் பெரும்பாலும் தங்களின் பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடுவது ஏன்? (பி.விநாயகராஜ், சென்னை–1)

ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல், வெளிநாடுகளில் சுதந்திரமாக சுற்றுவதை பிரபல கதாநாயகிகள் அனைவரும் விரும்புகிறார்கள். ஒப்பனை இல்லாமல் சுற்றும்போது, அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அதுவே அந்த நாயகிகளுக்கு சவுகரியமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெளிநாடுகளில் வைத்துக் கொள்கிறார்கள்!

***

மாதவன் டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறதே...அது என்ன கதை? அந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? (டி.ஜார்ஜ், தேவகோட்டை)

விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை வரலாறை மாதவன் டைரக்டு செய்வதுடன், அவர் வேடத்தில் நடிக்கவும் செய்கிறார்!

***

குருவியாரே, விக்ரம் அவருடைய மகனை நடிகராக கொண்டு வருவது போல், விஜய்யும் மகனை நடிக்க வைப்பாரா? (ஆர்.டேனியல், நசரத்பேட்டை)

விஜய்யின் மகன் சஞ்சய் இப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம், ‘‘முதலில் படிப்பு...அப்புறம்தான் நடிப்பு’’ என்று விஜய் கூறியிருப்பதாக சொல்கிறார்கள்!

***

ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறாரா? (வே.கவுதம், திருச்சி)

விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘மகாமுனி’ படத்தில், ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறாராம்!

***

குருவியாரே, டைரக்டர் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவதாக செய்திகள் எதுவும் வரவில்லையே...அவர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்? (எம்.அகமது செரீப், நாமக்கல்)

‘‘காதலி சொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்து முடிப்பதுதான் ஒரு உண்மையான காதலனின் கடமை’’ என்பதில், விக்னேஷ் சிவனுக்கு முழுமையான நம்பிக்கை. அதன்படி அவர் செயல்பட்டு வருகிறார்!

***

திரிஷா இப்போதெல்லாம் தோழிகளுடன் ஆட்டமும், பாட்டுமாக இருப்பதில்லையே...என்ன காரணம்? (அன்புசெல்வன், காஞ்சிபுரம்)

வயது ஆகிறது அல்லவா? பருவம் மாறும்போது, அடக்க ஒடுக்கம் அதுவாகவே வந்து ஒட்டிக் கொள்ளுமாம்!

***

குருவியாரே, ராமராஜன், மோகன் ஆகிய இருவரும் என்ன செய்கிறார்கள்? (வே.தட்சிணாமூர்த்தி, நெய்வேலி)

ராமராஜன், மோகன் ஆகிய இருவருமே அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்!

***

யோகி பாபு இதுவரை நடித்த படங்களில், அதிக சம்பளம் வாங்கியது எந்த படத்துக்கு? (ஆர்.செண்பகமூர்த்தி, தஞ்சை)

‘தர்மபிரபு’ என்ற படத்துக்கு யோகி பாபு அதிக சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்!

***

குருவியாரே, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் என்ன வேடத்தில் நடித்து இருக்கிறார்? (எம்.அருண், திருவாரூர்)

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார், வழக்கறிஞராக நடித்து இருக்கிறார்!

***

தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், ‘‘பேய் கதை இருந்தால் சொல்லுங்க’’ என்று நயன்தாரா கேட்கிறாராமே...? பேய் மீது அத்தனை ஆர்வமா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அவர் நடித்த ‘மாயா’ என்ற பேய் படம், ‘சூப்பர் ஹிட்’ ஆனதன் விளைவு அது! அந்த படம் பேய் வசூல் செய்ததால், பேய் கதைகள் மீது நயன்தாராவுக்கு அதிக ஆர்வம் வந்து இருக்கிறது!

***

குருவியாரே, சாய்பல்லவிக்கு எது அழகு? (கே.சவுந்தரராஜன், சேலம்)

அவருடைய பல்வரிசையும், சிரிப்பும் அழகு!

***

சமந்தா படுகவர்ச்சியாக நடிப்பதுடன், இரட்டை அர்த்த வசனங்களையும் பேசுகிறாரே...? அவருடைய கணவர் ஒன்றும் சொல்வதில்லையா? (பி.அன்பழகன், நாகர்கோவில்)

‘‘அதுவும் நடிப்புதானே!’’ என்று கணவர் நாகசைதன்யா கருத்து தெரிவித்து இருக்கிறார்!

***

குருவியாரே, சிவகுமார் நடித்த 100–வது படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? (ஏ.பாரூக், அமானியா நகர்)

சிவகுமார் நடித்த 100–வது படம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி.’ அந்த படத்தை இயக்கியவர்கள்: தேவராஜ்–மோகன்.

***

ரஜினிகாந்துடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேருவாரா? (ரஜினி கண்ணன், கோவை–8)

கீர்த்தி சுரேசின் அடுத்த குறி, ரஜினிகாந்த் படம்தான்!

***

குருவியாரே, சாய்பல்லவி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா அல்லது பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா? (எம்.சுதாகர், கடலூர்)

ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் தருவதாக ஆசை காட்டியும், சாய்பல்லவி நடிக்க மறுத்து விட்டாராம். அவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்!

***

விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி படம் எது? அந்த படத்தின் கதாநாயகன் யார்? படம் எப்போது திரைக்கு வந்தது? (எஸ்.பி.தங்கராஜ், புதுச்சேரி)

எம்.எஸ்.விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி படம், ‘எங்கிருந்தோ வந்தான்!’ சத்யராஜ் நடித்த அந்த படம், 1995–ல் திரைக்கு வந்தது!

***

குருவியாரே, அமலாபால் மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா? (எஸ்.அசோக்குமார், பெரியகுளம்)

திருமண வாழ்க்கையில் அமலாபாலுக்கு விருப்பமே இல்லையாம். இப்போது மாதிரி எப்போதும் தனியாக–சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறாராம்!

***

ஒரு காலத்தில், தமிழ் திரையுலகில் ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்த அம்பிகா இப்போது, ‘சின்னத்திரை’க்கு போய் விட்டாராமே...? அங்கே அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (ஏ.அமல்ராஜ், கடையநல்லூர்)

அம்பிகா, ‘சின்னத்திரை’க்கு போய் ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ‘சின்னத்திரை’யில் அவர் 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்!

***

குருவியாரே, வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் அவருடைய தம்பி பிரேம்ஜி தவறாமல் இடம் பெற்று விடுகிறாரே..? (எம்.ஜெயப்பிரகாஷ், ராசிபுரம்)

வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் ‘பாசக்கார’ அண்ணன்–தம்பி. எந்த வி‌ஷயத்திலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனைப்போல் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும் இளைய தலைமுறை நடிகர்கள் யார்–யார்? (எம்.எஸ்.எம்.வெற்றிவேல், மணியாச்சி)

‘இளைய தலைமுறை’ நடிகர்களில் ஒரு சிலரை தவிர, பெரும்பாலானவர்கள் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார்கள்!

***

ஆசிரியரின் தேர்வுகள்...