சாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..?


சாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..?
x
தினத்தந்தி 26 May 2019 6:07 AM GMT (Updated: 26 May 2019 6:07 AM GMT)

நடிகை சாய்பல்லவி, குடும்பம், வயது, அழகு, கல்வி, காதல், கல்யாணம் போன்றவை பற்றி மனத்திறந்து பேட்டி அளித்திருக்கிறார்

நான் சினிமாவுக்கு வர காரணம் கணக்கு பரீட்சை. அந்த பரீட்சைக்கு போகாமல் எப்படி ‘கட்’ அடிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, டான்ஸ் மாஸ்டர் எட்வின் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அம்மாவை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டு, நடிக்க சென்றேன். எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாது. அவர்கள் சொன்ன இடத்தில் நின்று கொண்டு சொன்னதுபோல் செய்தேன். அப்படி நான் கணக்கு பரீட்சைக்கு கட் அடித்துவிட்டு நடித்த படம் தான் தாம்தூம். இனி இதுதான் உன் பாதை என்று கடவுள் எனக்கு காட்டிய வழி அது.

‘ரவுடி பேபி’யால் கால் வலி

‘மாரி-2’ படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி.. பாட்டு பற்றி என்னிடம் கூறியபோதே ‘பிரபு தேவா டான்ஸ் மாஸ்டராக இருந்து விடக்கூடாது’ என்று நினைத்தேன். அவர், 100 தடவைகூட திரும்பத் திரும்ப ஆடவைத்து ‘ஸ்டெப்’களை சரிசெய்வார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நானோ அந்த அளவுக்கு முயற்சி செய்ய விரும்பாத சோம்பேறி. நான் நடனம் ஆடுவதற்காக செட்டுக்குள் நுழைந்தபோது நிறைய டான்சர்கள் தரையில் உருண்டுபுரண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதை பார்த்ததும் நான் தனுஷிடம், ‘இவர்கள் நமது பாடலுக்கு நம்மோடு ஆடப்போகிறவர்களா?’ என்று கேட்டேன். தனுஷ், இல்லை என்றார்.

சிறிது நேரம் கடந்ததும் டைரக்டர் வந்து, பிரபு தேவாதான் நடனஅமைப்பாளர் என்றார். அப்போதுதான் தனுஷ் என்னை ஏமாற்றியது தெரிந்தது. அந்த பாட்டுக்காக மூன்று நாட்கள் பயிற்சி செய்தேன். கால்வலியும், ரத்தம் கட்டிப்போகுதலும் பலருக்கும் ஏற்பட்டுவிட்டது. கடைசியில் எல்லோரும் சிறப்பாக ஆடினோம். சிறுவயதிலே நான் நன்றாக நடனம் ஆடுவேன். மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் நடனம் டி.வி.யில் ஒளிபரப்பாகும்போது நானும் அப்படியே அவர்களை போல் ஆடிவிடுவேன். எனது நடன திறமைக்கு அம்மா அதிக ஊக்கமளித்தார்.

முகப்பரு வில்லன்

படிக்கும் காலத்தில் இருந்தே முகப்பரு என் வில்லன்தான். ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தபோது முகப்பருவை மறைக்க முகத்தை துணியால் மூடிக்கொள்வேன். பிரேமம் சினிமா வெளியாக இருந்த அன்றுகூட நான் அம்மாவின் கையை பற்றிக்கொண்டு ‘ரசிகர்களுக்கு என்னை பிடிக்குமா?’ என்று கேட்டேன். அந்த சினிமா எனக்கு அதிக தன்னம்பிக்கையை தந்தது. முகப்பரு உள்ள பல பெண்களும் அந்த படத்தை பார்த்த பின்பு தன்னம்பிக்கையோடு முகத்தை மூடாமல் நடந்தார்கள். மேக்அப் ஒருபோதும் போட்டுக்கொள்ளக்கூடாது என்ற முடிவும் அன்று எடுத்தேன். நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படி இருப்பதே நமக்கு பேரழகு. என் முடிவை எல்லா டைரக்டர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதுபோல் உடை விஷயத்திலும் நான் கவனமாக இருக்கிறேன். சிறுவயதில் நான் சிறிய உடைகளை அணிந்து நடனமாடி யிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த மாதிரியான உடைகள் எனக்கு சவுகரியமாக இல்லை. எனக்கு பிடிக்காத காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு நான் உடன்படுவதில்லை.

ஜார்ஜியாவில் ஆறு வருடங்கள்

படிப்பதற்காக நான் ஆறு வருடங்கள் ஜார்ஜியாவில் இருந்தேன். இங்கே எனது பெற்றோர் இருக்கிறார்கள். அங்கு எனக்கு யாரும் இல்லை. அங்கும் நமது கலாசாரத்தை கைவிடாத வாழ்க்கை வாழ்வது என்பது நானே எடுத்த தெளிவான முடிவு. அந்த முடிவில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன்.

இங்கு நான் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்தேன். ஆண்களோடு பேசுவதும், நட்புகொள்வதும் தவறானது என்ற கருத்தையும் கொண்டிருந்தேன். ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். வகுப்பிற்குள் சென்றபோது அங்கு மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். நல்ல நட்பிற்கு ஆண், பெண் பேதமில்லை என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. சாதாரணமாக நினைக்கிற பலவும் பெரிய விஷயங்கள் என்பதை அங்குதான் நான் புரிந்துகொண்டேன்.

வயது 26.. திருமணம் எப்போது..

என் வயது 26. ஆனால் என் மனமுதிர்ச்சி அதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம். ‘லவ்’ என்ற வார்த்தையை கேட்கும்போதே எனக்கு உள்ளே இருந்து, ‘இது ரொம்ப சோர்ந்து போகிற சமாச்சாரம்’ என்று யாரோ சொல்வது கேட்கிறது. திருமணத்தை பற்றி கேட்கும்போது நான், ‘பலமான நட்புதான் மகிழ்ச்சியான மணவாழ்க்கை’ என்று சொல்வேன். என் பெற்றோரை பார்த்துதான் நான் அவ்வாறு சொல்கிறேன். அவர்கள் நவீன கலாசார இரவு விருந்துகளுக்கு செல்வதில்லை. விலை உயர்ந்த பரிசுகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் அவர்கள் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் மதிப்பவர்கள். இதெல்லாம் இல்லாத திருமண பந்தம் நீடிக்காது. இவரை நான் சொந்தமாக்கியிருக்கிறேன் என்ற எண்ணம் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ கடைசி இடத்திற்கு வாழ்க்கைத்துணை போய்விடுவார். ஒருவருக்கொருவர் மரியாதையை கைவிடாத, பரஸ்பரம் குற்றம்சாட்டாமல் முன்னோக்கி செல்லும் வாழ்க்கையில்தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தங்கையும் நடிகை

எனது தங்கை பூஜாவும் நடித்திருக்கிறார். இப்போது சென்னையில் பட்டமேற்படிப்பு படித்துக்கொண்டே சமூகசேவை செய்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சீர்திருத்த பள்ளிகளில் இருக்கும் சிறுவர்களுக்கு பாடம் படித்துக் கொடுக்கிறார். எனது அப்பா கண்ணனும், அம்மா ராதாவும் எங்களை சமூக பொறுப்புள்ளவர்களாக வளர்த்திருக்கிறார்கள். ஒரு கேரவான் வாகனம் வாங்கி, ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு இலவச சிகிச்சையும், மருந்தும் நான் வழங்கவேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார். அதை எப்படியாவது செய்யவேண்டும் என்பது என் ஆசை.

சைவம் தரும் அழகு

வெளித்தோற்றமல்ல மனமே அழகு என்று நம்புகிறவள்நான். முடிந்த அளவு செயற்கை பொருட்களை பயன்படுத்தமாட்டேன். சைவ உணவுதான் சாப்பிடுவேன். பாலையும், பால் வகை பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க விரும்புகிறேன். இனிப்பு பிடிக்கும். ஆனாலும் இப்போது அதை குறைத்துவிட்டேன். வயதுக்கும், வேலைக்கும் தகுந்தபடி உணவிலும் கட்டுப்பாடு தேவை. நான் வாரத்தில் மூன்று நாட்கள் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக பேட்மிண்டன் விளையாடுவேன். தினமும் ஒரு மணிநேரம் தியானம் செய்வேன். தினமும் 108 தடவை காயத்ரி மந்திரம் சொல்வேன். எனது கூந்தல் பாரம்பரியமாக கிடைத்தது. எனது பாட்டியும், அம்மாவும் செம்பருத்தி, கறிவேப்பிலை கலந்த எண்ணெய் தயாரித்து தருகிறார்கள். அதை தலைக்கு பயன்படுத்துகிறேன். நான் சீ்ப்பு பயன்படுத்தி கூந்தலை சீவுவதில்லை. விரல்களால் சிக்கு எடுத்து கோதிவிட்டுக்கொள்கிறேன்.


Next Story