சினிமா செய்திகள்

மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்? + "||" + Ajith is back in acting the police officer?

மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்?

மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்?
மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அஜித் நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை மூலம் பிரபலமான வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிறது.


இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சில இளம் பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடி அவர்களுக்கு நியாயம் பெற்று தருவதுபோன்ற கதையம்சத்தில் உருவாகிறது. ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்காக அஜித்குமார் தனது எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.