நாசரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார்?


நாசரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார்?
x
தினத்தந்தி 30 May 2019 10:15 PM GMT (Updated: 30 May 2019 6:47 PM GMT)

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஷால் அணி மீண்டும் களத்தில் இறங்குகிறது. நாசர் தலைவர் பதவிக்கும் கார்த்தி பொருளாளர் பதவிக்கும் நிற்கிறார்கள். ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த கருணாஸ் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுகிறார். இன்னொரு துணைத்தலைவரான பொன்வண்ணன் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும், எனவே அவருக்கு பதிலாக பூச்சிமுருகனை களம் இறக்க விஷால் தரப்பினர் முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நாசர், கார்த்தியை எதிர்த்து நிற்க யாரும் விரும்பவில்லை என்றும், எனவே இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு புதியவர்கள் சிலரை நிறுத்தவும் திட்டமிட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் உதயா போட்டியிடுகிறார்.

தலைவர் பதவிக்கு ராதிகா சரத்குமாரை நிறுத்த எதிர் அணியினர் விரும்பினர். ஆனால் அவர் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். எஸ்.வி.சேகர், கே.ராஜன் ஆகியோர் துணைத்தலைவர் அல்லது செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. ராதாரவியை சங்கத்தில் இருந்து நீக்கி வைத்துள்ளனர். அவர் கோர்ட்டில் தடை பெற்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

Next Story