“மக்களோடு என்னை இணைத்த இசை” - இளையராஜா


“மக்களோடு என்னை இணைத்த இசை” - இளையராஜா
x
தினத்தந்தி 31 May 2019 11:15 PM GMT (Updated: 1 Jun 2019 11:34 AM GMT)

இசைதான் தன்னை மக்களோடு இணைத்துள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் நாளை மாலை நடக்க உள்ளது. இதில் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பலர் கலந்து கொண்டு பாடுகிறார்கள். இதுகுறித்து இளையராஜா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

“பல ஆண்டுகளுக்கு முன்பு நானும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் மற்றும் பி.சுசீலா, ஜானகி உள்ளிட்ட பல இசை கலைஞர்கள் சேர்ந்து 3 இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி என் வீட்டு பக்கத்திலேயே கண்ணதாசனுக்கு சிலை வைத்தோம். இப்போது இசை கலைஞர்கள் சங்கத்துக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறோம்.

இதில் கிடைக்கும் தொகை நிகழ்ச்சியை நடத்துவதற்கே செலவாகி விடும். எனவே இசை சங்கத்துக்கும் இசை கலைஞர்களுக்கும் எனது அன்பளிப்பாக ஒரு நல்ல காரியம் செய்ய இருக்கிறேன். எனது சொந்த முயற்சியில் அதை செய்வேன். அதை இசைகச்சேரி மேடையில் அறிவிப்பேன்.

நான் எங்கு சென்றாலும் மக்கள் இன்முகத்தோடு வரவேற்கிறார்கள். ஒரு தனிப்பட்ட மனிதனான என்னுடைய பிறந்த நாளை ஆண்டு முழுவதும் மக்களும், மாணவ-மாணவிகளும் கொண்டாடினார்கள். இதுபோல் எங்கேயும் நடந்தது இல்லை. மக்களோடு மக்களாக நான் இருக்கிறேன். என் இசை அவர்கள் உள்ளத்தை தொட்டு உயிரில் கலந்து வாழ்கிறது. மக்களுக்கும் எனக்குமான பிணைப்பு கயிறுவைத்து கட்டியது இல்லை. இசைதான் எங்களை இணைத்து இருக்கிறது.” இவ்வாறு இளையராஜா கூறினார்.


Next Story