பேச்சுவார்த்தையில் உடன்பாடு இந்தி காஞ்சனாவை இயக்க லாரன்ஸ் சம்மதம்


பேச்சுவார்த்தையில் உடன்பாடு இந்தி காஞ்சனாவை இயக்க லாரன்ஸ் சம்மதம்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 7:45 PM GMT)

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011-ல் திரைக்கு வந்து வசூலை அள்ளிய காஞ்சனா படம் தற்போது இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011-ல் திரைக்கு வந்து வசூலை அள்ளிய காஞ்சனா படம் தற்போது இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் நாயகனாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். லாரன்சையே இயக்குனராக ஒப்பந்தம் செய்தனர்.

இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை அக்‌ஷய்குமார் தனது வலைத்தளத்தில் வெளியிட்டார். லாரன்சுக்கு தெரியாமலும் அவரிடம் ஆலோசிக்காமலும் இதை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காஞ்சனா இந்தி படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில். “மதியாதார் வாசலை மிதியாதே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி மரியாதை முக்கியம். அதனால் ‘லட்சுமி பாம்’ படத்தில் இருந்து விலகுகிறேன். படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமல் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இதை அவமரியாதையாக கருதுகிறேன்” என்று கூறினார்.

இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் படக்குழுவினர் மும்பையில் இருந்து சென்னை வந்து ‘லட்சுமி பாம்’ படத்தை தொடர்ந்து இயக்குமாறு லாரன்சுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து லட்சுமி பாம் படத்தை மீண்டும் இயக்குவதாகவும் தனது உணர்வுகளை புரிந்து கொண்ட அக்‌ஷய்குமாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி என்றும் லாரன்ஸ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Next Story