பணமதிப்பிழப்பை படமாக்கிய டைரக்டருக்கு மிரட்டல்


பணமதிப்பிழப்பை படமாக்கிய டைரக்டருக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 7 Jun 2019 9:30 PM GMT (Updated: 7 Jun 2019 5:34 PM GMT)

பணமதிப்பிழப்பை படமாக்கிய டைரக்டர், படக்குழுவினருக்கு மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளார்.

பண மதிப்பிழப்பை மையமாக வைத்து ‘மோசடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக விஜூ, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளனர். அஜெய்குமார், என்.சி.பி.விஜயன், வெங்கடாச்சலம், நீனு சுகுமாரன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜெகதீசன் இயக்கி உள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினருக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து டைரக்டர் கே.ஜெகதீசன் கூறியதாவது:-

“பண மதிப்பிழப்பின் போது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததும் மக்கள் எப்படியெல்லாம் பாதித்தனர். பெரும்புள்ளிகள், அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி இரண்டாயிரம் ரூபாயாக மாற்றினார்கள். குறுக்கு வழியில் மோசடி செய்தனர் என்பதை திகில் கலந்த கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளோம்.

கதாநாயகன் கதாபாத்திரம் பணத்தை மாற்றி கொடுத்து மோசடி செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை எடுத்ததால் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் மிரட்டல்கள் வருகின்றன. கருப்பு பணத்தை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாகவும் விமர்சிக்கின்றனர். டைரக்டரை என்கவுண்ட்டரில் தீர்த்து கட்டவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யூ சான்றிதழ் அளித்து உள்ளனர்.”

இவ்வாறு டைரக்டர் ஜெகதீசன் கூறினார்.

Next Story