சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, தமிழ்வாணன் டைரக்‌ஷனில் அமிதாப்பச்சன் நடிக்க இருந்த ‘உயர்ந்த மனிதன்’ படம் என்ன ஆனது? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘உயர்ந்த மனிதன்’ படத்தை தொடங்குவதில் சில பிரச்சினைகள் இருந்தன. அவை பேசி தீர்க்கப்பட்டு விட்டன என்று அந்த படக்குழுவினர் கூறுகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்!

***

அனுஷ்காவை எல்லா கதாநாயகர்களுக்கும் பிடிக்கிறது. அவருக்கு பிடித்த கதாநாயகன் யார்? (வி.வெங்கட்ராமன், திருச்சி)

அனுஷ்காவுக்கு பிடித்த கதாநாயகர்கள்: ஆர்யா, பிரபாஸ்!

***

குருவியாரே, நடிகர் தனுசின் சுபாவம் என்ன? கோபக்காரரா, கோபமே வராதவரா? (என்.சித்ரா, மதுரை)

பந்தா இல்லாத எளிமையான சுபாவம் கொண்டவர், தனுஷ். அவர் கோபக்காரர் அல்ல. மென்மையான மனதுக்கு சொந்தக்காரர்!

***

கீர்த்தி சுரேஷ் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று தமிழ் பட உலகுக்கு ‘குட்பை’ சொல்லி விட்டாராமே..? (கே.ராதாகிருஷ்ணன், நெய்க்காரப்பட்டி)

முற்றிலும் தவறான தகவல், இது. ‘‘எத்தனை மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் பட உலகை ஒருபோதும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’’ என்கிறார், கீர்த்தி சுரேஷ்!

***

குருவியாரே, அஜித்குமாரின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகா தற்போது எங்கே வசிக்கிறார்? என்ன செய்கிறார்? (ஜி.ஞானவேல், குமாரபாளையம்)

கனிகாவுக்கு திருமணமாகி கணவரும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். அவர் குடும்பத்துடன் சென்னையில்தான் இருக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ‘மதுரை ஜங்‌ஷன்’ என்ற பெயரில் அவர் ஓட்டல் நடத்தி வருகிறார்!

***

கோவை சரளா எல்லா திகில் படங்களிலும் இருக்கிறாரே...அவருக்கும், பேய்க்கும் அப்படி என்ன பாசப்பிணைப்பு? (இரா.சரவணன், திருக்கோவிலூர்)

பேய்களே இறங்கி வந்து மரியாதை கொடுக்கும் அளவுக்கு சக்தி மிகுந்தவராம், கோவை சரளா. அதனால்தான் அனைத்து பேய் படங்களிலும் சரளா தவறாமல் இடம்பெறுகிறார்!

***

குருவியாரே, 3 தடகள வீராங்கனைகளை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து படம் எடுத்தால்...யார் யாருக்கு என்ன வேடம் கொடுக்கலாம்? (ஏ.அகமது செரீப், செய்துங்க நல்லூர்)

ஓட்டப்பந்தய வீராங்கனை வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ், நீளம் தாண்டுகிற வீராங்கனை வேடத்துக்கு நயன்தாரா, உயரம் தாண்டுகிற வீராங்கனை வேடத்துக்கு திரிஷா ஆகியோரை நடிக்க வைக்கலாம்!

***

‘‘என் கதையை திருடி, அதில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள்’’ என்று நடிகர்–டைரக்டர் பார்த்திபன் கூறியிருக்கிறாரே...? (எஸ்.ரவீந்திரன், தேவகோட்டை)

பலே ஆசாமிகள், மோசடி பேர்வழிகள் சினிமாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு பார்த்திபனின் ஆதங்கம் ஒரு உதாரணம்!

***

குருவியாரே, ஏறக்குறைய பழைய கதாநாயகிகளில் பாதி பேர், ‘அம்மா’ வேடத்துக்கு வந்து விட்டார்களே... அவர்களுக்கு சம்பளம் போதுமான அளவுக்கு கொடுக்கிறார்களா? (ஆர்.கோதண்டராமன், குடியாத்தம்)

‘‘போதும்...போதும்...’’ என்கிற அளவுக்கு அம்மா நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் பழைய நாயகிகள் பலர் அம்மா வேடத்துக்கு போட்டி போடுகிறார்களாம்!

***

வருகிற 14–ந் தேதி, 10 படங்கள் திரைக்கு வருகிறதாமே..? இது, தமிழ் பட உலகின் வளர்ச்சிதானே...? (சா.ரமேஷ்காந்த், தொட்டியம்)

10 படங்கள் அல்ல. 11 படங்கள் அன்று திரைக்கு வர உள்ளன. 11–வது படம்: சுட்டுப்பிடிக்க உத்தரவு. டைரக்டர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகிய மூன்று பேரும் நடித்த படம், இது. ராம்மோகன் தயாரிக்க, ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார். அதிக படங்கள் தயாராகி வெளிவருவது ஒருவகையில் வளர்ச்சி. இன்னொரு வகையில், வீழ்ச்சி என்கிறார், ஒரு தயாரிப்பாளர்!

***

குருவியாரே, திருமணத்துக்கு முன்பே சில நடிகைகள் கர்ப்பமாகி விடுகிறார்களாமே...அந்த பட்டியலில் இடம் பிடித்த நடிகைகள் யார்–யார்? (எம்.வாசுதேவ், பெரியநாயக்கன் பாளையம்)

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு அழகான நடிகையை பற்றி அப்படி சொல்வார்கள். திருமணத்துக்கு முன்பே அவர் கர்ப்பமாகி விட்டதால், அவசரம் அவசரமாக அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. அதன்பிறகு ஒரு பிரபல நடிகரின் காதலி அப்படி கர்ப்பமானார். இப்போது மருந்தும், மாத்திரைகளும் நிறைய வந்து விட்டதால், யாருக்கும் வயிறு பெரிதாகும் அளவுக்கு கர்ப்பத்தை விட்டு வைப்பதில்லை!

***

எஸ்.ஜே.சூர்யா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? (வெ.அற்புதராஜ், அடைக்கலாபுரம்)

அவருக்கு திருமணத்துக்கான வயது இன்னும் வரவில்லையாம்!

***

குருவியாரே, நயன்தாராவின் உண்மையான பெயர்–விவரங்களை கூற முடியுமா? அவர் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (எஸ்.ஜான்சன், நாகர்கோவில்)

நயன்தாராவின் உண்மையான பெயர், டயானா. அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்!

***

ராய் லட்சுமியின் நீண்ட கால ஆசை எது? (சி.தமிழ்செல்வன், பட்டுக்கோட்டை)

வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்...இதுவே ராய்லட்சுமியின் நீண்ட கால ஆசை!

***

குருவியாரே, தமன்னா நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்களில், அவருக்கு மிகவும் பிடித்த படம், பிடித்த கதாபாத்திரம் எது? (டி.பால்பாண்டியன், திண்டுக்கல்)

தமன்னாவுக்கு பிடித்த சமீபகால படம், ‘தர்மதுரை.’ அதில் அவர் ஏற்ற டாக்டர் வேடம், பிடித்த கதாபாத்திரமாம்!

***

ஹன்சிகா மோத்வானி நடித்து வரும் ‘மஹா’ படத்தில், கவுரவ வேடமாக இருந்த சிம்புவின் கதாபாத்திரம் விஸ்தரிக்கப்படுகிறதாமே...அப்படியா? (ஏ.ராஜதுரை, வேலூர்)

‘‘அந்த படத்துக்காக சிம்புவின் கதாபாத்திரம் விஸ்தரிக்கப்படுவது உண்மைதான்’’ என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் வருடத்துக்கு வருடம் படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையும், வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறதாமே...அது உண்மையா? (கா.மணிவண்ணன், கடலூர்)

படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்தால், வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்தானே...!

***

தமிழ் பட உலகில், வாரிசு நடிகர்–நடிகைகளின் அந்தஸ்து எந்த நிலையில் உள்ளது? (எம்.ஜானகிராமன், ஜோலார்பேட்டை)

வாரிசு நடிகர்–நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது, உண்மை!

***

குருவியாரே, ‘கபாலி’ படத்துக்குப்பின் ராதிகா ஆப்தேவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவியவில்லையே...ஏன்? (செ.ராஜேந்திரன், குன்னூர்)

தென்னிந்திய டைரக்டர்களை பற்றி ராதிகா ஆப்தே சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகள்தான் காரணம். டைரக்டர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து ராதிகா ஆப்தே உள்ளே வந்து விடாமல், தமிழ் பட உலகின் கதவுகளை இழுத்து மூடிவிட்டார்கள்!

***

பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடல்களை பாடியிருக்கிறார்களா? (மு.நவாஸ்கான், மணியாச்சி)

இருவரும் சேர்ந்து நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்கள்!

***