காதலிக்க நேரமில்லை.. கற்றுக்கொள்ள நேரம் இருக்கிறது...


காதலிக்க நேரமில்லை.. கற்றுக்கொள்ள நேரம் இருக்கிறது...
x
தினத்தந்தி 9 Jun 2019 7:03 AM GMT (Updated: 9 Jun 2019 7:03 AM GMT)

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டசின் கடைசிப் படம் வெளியாகி ஓராண்டாகிவிட்டது.

ந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டசின் கடைசிப் படம் வெளியாகி ஓராண்டாகிவிட்டது. அதற்கப்புறம் அவரை அதிகம் காண முடியவில்லை. காணாமல்போன காலகட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டால், அமெரிக்காவில் நடிப்பிற்கான பயிற்சி பெற்றுகொண்டிருந்தேன் என்கிறார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இவானாவின் சப்பக் ஸ்டூடியோவில் பயிற்சி பெற்றுள்ளார், ஜாக்குலின்.

ஆலிவுட்டின் டாப் நடிகர், நடிகையர் சார்லீஸ் தெரான், ஜேம்ஸ் பிரான்கோ, பிராட் பிட், ஹாலி பெர்ரி, கல் கடோட், ஜெரார்டு பட்லர் போன்றோருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர் இவானா. எனவே தனது நடிப்புத் திறமையைக் கூர்தீட்டிக்கொள்ள அவரை ஜாக்குலின் பயன்படுத்திக்கொண்டதில் ஆச்சரியமில்லை.

அதுபற்றி ஜாக்குலின் மேலும் விரிவாக, ‘‘பத்தாண்டுகளாக நடிகையாக இருந்தபோதிலும், நான் முறையான நடிப்புப் பயிற்சி எதையும் பெறவில்லை. அதை ஏதாவது ஒரு வகுப்பில் அமர்ந்துகொண்டு என்னால் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் லாஸ் ஏஞ்சல்சில், இவானா ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கற்றுக் கொடுக்கிறார். அது, நம் நடிப்புத் திறமையை மெருகேற்றிக்கொள்ள உதவுகிறது’’ என்கிறார்.

அமெரிக்காவில் நடிப்புக் கற்றது, தன் வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும், அது தனது வருங்காலத் திரைப்படங்களில் தனக்குக் கைகொடுக்கும் என்றும் ஜாக்குலின் கருதுகிறார்.

சினிமாவில் அடுத்து சவாலான வேடங்களில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக மசாலா படங்களை முற்றிலும் ஒதுக்கிவிட மாட்டேன் என்றும் ஜாக்குலின் சொல்கிறார்!

‘‘நான் ஒரு நடிகையாக, மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை அளிக்க விரும்புகிறேன். அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், சோகப்பட வைக்க வேண்டும், நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். அதேநேரம், நான் எப்படிப்பட்டவள் என்று என்னையே சுயமதிப்பீடு செய்யவும் விரும்புகிறேன். ஏற்கனவே நான் செய்து வருபவற்றுடன், வித்தியாசமான விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன். அதேநேரம், வழக்கமான பாத்திரங்கள், பரிசோதனை முயற்சியிலான பாத்திரங்கள் இரண்டுக்கும் இடையில் நான் ஒரு சமநிலையையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’’ என்கிறார்.

இணையத்தில் பிரவேசிக்கத் திட்டமிட்டிருக்கிற ஜாக்குலின், ஒரு தொடரில் கொலைகாரியாகவும் நடிக்கப் போகிறார்.

‘‘நான் இதுவரை மூளையைக் கசக்காமல் எளிதாக நடித்துமுடித்துவிட்டேன். இனியும் அப்படிப்பட்ட எளிதான கதாபாத்திரங்களை செய்ய விரும்பவில்லை. எனக்கு சவால்விடும் கதாபாத்திரங்களை நான் எதிர்பார்க்கிறேன். அவை என் தோள்களில் சுமையை ஏற்றி, என்னை கடுமையாக உழைக்கத்தூண்டவேண்டும். முற்றிலும் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறேன்’’ என விளக்குகிறார்.

ஆனால் அதற்காக, கொலைகாரி வேடமா? எல்லோருடனும் கலகலவென்று பழகும் ஜாக்குலினுக்கு அது பொருந்துமா எனக் கேட்டால்...

‘‘அதுதான் சவாலே!’’ என்கிறார் உற்சாகமாக. தொடர்ந்து, ‘‘கோபம், பொறாமை, வருத்தம், வெறுப்பு போன்ற உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி கூறும்போது, அது நிஜமாகவே எனக்கு கடினமாக இருக்கிறது. காரணம், நான் நிஜ வாழ்வில் பெரும்பாலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது கிடையாது. அந்த உணர்வுகளை நானே முழுமையாக உணர்ந்தால்தான் அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். அதில்தான் நடிப்பின் அழகே இருக்கிறது..!’’ என்கிறார், மகிழ்ச்சி மாறாமல்.

உண்மையில் எது உங்களை கோபப்படுத்தும் என்ற கேள்விக்கு சற்று நீண்ட யோசனைக்குப் பின், ‘‘எனக்கே சொல்லத் தெரியவில்லை. நான் பொதுவாக கோபத்தில் வெடிப்பதில்லை, உள்ளுக்குள்ளும் புழுங்குவதில்லை. ஆனால் ஒரு முழுமையான நடிகை ஆவதற்கு, கோபம் உள்ளிட்ட உணர்வுகளையும் நான் வெளிப்படுத்த அறிய வேண்டும்’’ என்கிறார்.

ஜாக்குலினின் அடுத்த படமான ‘டிரைவ்’ வெளியாவது, ரொம்ப தாமதமாகி வருகிறது. அது பற்றி..?

‘‘அதில் எனக்கு வருத்தம் இல்லை. அந்தப் படத்துக்கான ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வேலைகள் முடிய வேண்டியிருக்கிறது. அதற்கு கொஞ்ச காலம் எடுக்கத்தான் செய்யும். இயக்குனர் தருண் மன்சுகனியும், எனது சக நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எனக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். டிரைவ் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கின்றன. இரண்டொரு மாதங்களில் அப்படம் வெளியாகும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்’’ என்றவர், தான் தற்காப்புக் கலை பயிலும் விஷயத்தையும் சொல்கிறார்.

‘‘தற்காப்புக் கலை பயிற்சி என்பது மனஅழுத்தத்தைப் போக்கும் நல்ல விஷயம். அது பெண்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக உணரவைக்கும். கத்தி, துப்பாக்கியை எப்படிக் கையாளுவது என்றும் நான் லாஸ் ஏஞ்சல்சில் கற்றுக்கொண்டேன்.’’

இப்படி பலவற்றுக்காகவும் ஓடிக்கொண்டே இருப்பதால், வாழ்வில் காதலைப் புறக்கணித்துவிட்டீர்களா எனக் கேட்டால், ‘‘நான் சற்று நீண்டகாலமாக வேலையிலேயே ஆழ்ந்துவிட்டேன். தவிர, காதல் போன்ற விஷயங்களை வலிந்து வரவழைக்கவோ, திட்டமிடவோ முடியாது’’ என்பவர், ‘‘நிஜத்தில் நான் ரொம்ப ரொமான்டிக்கான பெண். எல்லா நடிகர், நடிகையுமே அப்படித்தான்’’ என்கிறார் புன்னகையோடு.

Next Story