“ஷங்கரையும், சிம்புதேவனையும் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசுவதா?” வடிவேலுவுக்கு, சமுத்திரக்கனி கண்டனம்


“ஷங்கரையும், சிம்புதேவனையும் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசுவதா?” வடிவேலுவுக்கு, சமுத்திரக்கனி கண்டனம்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:30 PM GMT (Updated: 12 Jun 2019 5:49 PM GMT)

வடிவேலு கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்த படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்திருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார்.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும், படக்குழுவினரும் திட்டமிட்டனர். இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலுவும் சம்மதித்தார். அதைத்தொடர்ந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது. இதற்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. 

டப்பிடிப்பு தொடங்கும் நிலையில், வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டைரக்டர் ஷங்கர் புகார் செய்தார். இந்த படத்தை முடித்து கொடுக்காமல் வடிவேலு வேறு புதிய படத்தில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. 

அதைத்தொடர்ந்து வடிவேலு ஒரு பேட்டியில், ‘ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குனர் என்றும், சிம்புதேவனை சினிமா தெரியாதவர், வேலை செய்ய தெரியாதவர். அவர் ஒரு சின்ன பையன்’ என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு ‘மூடர்கூடம்’ படத்தின் டைரக்டர் நவீன் கடும் கண்டனம் தெரிவித்தார். அவரை தொடர்ந்து தற்போது நடிகரும், டைரக்டருமான சமுத்திரக்கனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அதில், ‘அண்ணன் வடிவேலுவின் பேட்டியை பார்த்தேன். ஷங்கரையும், சிம்புதேவனையும் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசி இருப்பது பெரும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது. சிம்புதேவனின் திறமை, புலிகேசி படத்தை தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story