தொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு


தொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:30 PM GMT (Updated: 14 Jun 2019 6:48 PM GMT)

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. சக்ரி டோலேட்டி இயக்கத்தில் ஹஷ் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இது உருவானது.

இந்தியில் காமோஷி என்ற பெயரில் தமன்னா நடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பே கொலையுதிர் காலம் படப்பிடிப்பு தொடங்கியது.

படம் பாதி முடிந்த நிலையில் நயன்தாராவுக்கும் படக்குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படம் முடிவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு கொலையுதிர் காலம் படவிழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்று நயன்தாரா பற்றி பேசியது சர்ச்சையை உருவாக்கியது.

ராதாரவியை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் கண்டித்தனர். நடிகர் சங்கமும் எதிர்த்தது. இதைத்தொடர்ந்து ராதாரவி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பிரச்சினை அடங்கி படத்தை நேற்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கொலையுதிர் காலம் தலைப்பை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் படத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கொலையுதிர் காலம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். படம் வெளியாகும் என்று தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகள் நடந்தன. ஆனால் கோர்ட்டு தடையால் படம் நிறுத்தப்பட்டது. படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story