சூர்யா படத்தில் மோகன்பாபு


சூர்யா படத்தில் மோகன்பாபு
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:16 PM GMT)

சூர்யா படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்க உள்ளார்.


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கிய காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

மத்திய சிறப்பு கமாண்டோ படை அதிகாரி வேடத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது.

தற்போது ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜாக்கி ஷெராப் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இறுதிச்சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா டைரக்டு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் 1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக அவரை கொண்டாடினார்கள்.

தமிழில் ரஜினிகாந்துடன் அன்னை ஓர் ஆலயம், கமல்ஹாசனுடன் குரு உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரரை போற்று படம் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகிறது.


Next Story