“திரைப்படங்களுக்கு தணிக்கை அவசியம்” தனுஷ் பேட்டி


“திரைப்படங்களுக்கு தணிக்கை அவசியம்” தனுஷ் பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2019 12:14 AM GMT (Updated: 21 Jun 2019 12:14 AM GMT)

தனுஷ் நடித்துள்ள ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாகிறது.

அசுரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். வட சென்னை-2 படமும் கைவசம் உள்ளது. தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:-

“பக்கிரி வித்தியாசமான படம். இந்திய கலாசாரத்தை பெருமைப்படுத்தும் விஷயங்கள் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பல நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்துள்ளனர். படப்பிடிப்புக்கு முன்பு பயிற்சிகள் எடுத்து நடித்தோம். தமிழில் வெளியாகும் எல்லா படங்களுக்கும் முன்கூட்டி பயிற்சி எடுத்து நடித்தால் செலவை குறைக்க முடியும்.

ஒரு இளைஞனின் ஆசையும் அதற்கான தேடலும்தான் படம். வெளிநாட்டு படவிழாக்களில் படத்தை கைதட்டி ரசித்தனர். எனது முதல் படத்தில் இருந்து எல்லாமே தானாக நடக்கின்றன. துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், அது ஒரு கனாகாலம், பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, இப்போது பக்கிரி எல்லாமே இறைவன் அருளால் தானாக அமைந்துள்ளன.

கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி பின்னால் இருப்பதாக கருதுகிறேன். ஏதேனும் ஆங்கில படங்கள் பிடித்து இருந்தால் அதை தமிழில் ரீமேக் செய்து நடிப்பேன். வெளிநாட்டினர் இந்திய படங்களை கவனிக்கிறார்கள். இந்திய, சீன படங்கள்தான் தியேட்டர்களில் அதிகம் வெளியாகின்றன.

சில படங்கள் கஷ்டப்பட்டு நடிப்பேன். அந்த படத்தை விட சாதாரணமாக நடித்த படம் நன்றாக ஓடும். படங்கள் ஓடாவிட்டால் மனதுக்கு வருத்தமாக இருக்கும். தோல்வியை விட வெற்றியை கையாள்வதுதான் கஷ்டம். இப்போது அசுரன் படத்தில் நடிக்கிறேன். அடுத்து செல்வராகவன் படத்தில் நடிக்க உள்ளேன்.

திரைப்படங்களுக்கு தணிக்கை தேவை இல்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். வன்முறை, முத்த காட்சிகளை எனது குழந்தைகளுடன் பார்த்து நெருடலாகி இருக்கிறேன். எனவே தணிக்கை அவசியம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story