அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல்


அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல்
x
தினத்தந்தி 28 Jun 2019 3:57 PM GMT (Updated: 28 Jun 2019 3:57 PM GMT)

அப்பா, எம்.எஸ்.விஸ்வநாதனை சீண்டுவது போல அவரும் விளையாடுவார்.

 ஒருமுறை அவர் அப்பாவிடம் “நான் எந்த தத்தகாரத்தை போட்டாலும் உங்களால பாட்டு எழுத முடியுமா?”

“ஏன் முடியாது?”

“அப்ப இந்த டியூனுக்கு பாட்டு எழுதுங்க பாப்போம்..”

‘டொயிங்.. டொயிங்.. டொயிங்..’ என்று தம்பூராவை மீட்டச் செய்கிறார்.

அப்பா யோசிக்க ஆரம்பிக்கிறார்.

விஸ்வநாதன் “என்ன?” என்பது போல தலையை ஆட்டுகிறார்.

“பொன்னென்பேன்” அப்பா சொல்கிறார்...

விஸ்வநாதன் அதே போல மேலும் வாசிக்க

“சிறு பூவென்பேன்...”

“அண்ணே..” என்று அப்பாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் விஸ்வநாதன்.

சில சமயம் டியூனும் அமையாது, பாட்டும் அமையாது. அந்த மாதிரி நேரத்தில் ஒரு இறுக்கம் ஏற்படும். இது ஒருசில பாடல்களுக்கு மட்டுமே நடந்திருக்கிறது. அப்படி ஒரு பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை...’ என்ற பாடல்.

பாடலுக்கான சூழலை சொல்லிவிட்டு இயக்குனர் ஸ்ரீதர் “அடுத்த மாதம் படப்பிடிப்பு. உடனே பாடலைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

விஸ்வநாதன் பல டியூன்களைப் போட்டார். அப்பாவும் பல பல்லவிகளை கொடுத்தார். ஆனால் ஸ்ரீதருக்கு எதுவும் பிடிக்கவில்லை. இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் போய்விட்டன.

இறுதியில் ஒருவழியாக ஒரு டியூனை தேர்வு செய்தார் ஸ்ரீதர். அப்பாவுக்கு ஏனோ ‘மூட்’ வரவில்லை. அவர் சொன்ன வரிகள் ஸ்ரீதருக்கு பிடித்தமானதாக இல்லை. அப்புறமும் ஒன்றும் நடக்கவில்லை.

இதற்கிடையில் படப்பிடிப்புக்கான நாளும் நெருங்கியது. பதட்டமானார் ஸ்ரீதர்.

ஒரு நாள் கோபத்தின் உச்சிக்கு சென்று “என்னமோ செஞ்சு தொலைங்க...” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பிறகு அப்பாவும் விஸ்வநாதனுமாக உட்கார்ந்து போராடினார்கள்.

அப்பா ஒரு பல்லவியை சொல்ல, உள்ளே டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் காதில் அது விழுந்து விட்டது.

சாப்பிடுவதை விட்டுவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்து “இதுதான் பல்லவி... சூப்பர்... மேல எழுதுங்க” என்று சத்தமாக சொன்னார்.

‘அப்பாடி... ஸ்ரீதருக்கு பிடித்துவிட்டது’ என்று அதே வேகத்தில் மொத்த பாடலையும் எழுதி முடித்து ஸ்ரீதரை வரச் சொல்லி வாசித்து பாடிக் காட்டினார்கள்.

“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று ஸ்ரீதர் சந்தோஷத்துடன் அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

ஒரு வழியாக 21 நாட்களுக்குப் பிறகு பாடல் எழுதப்பட்டுவிட்டது. தன் வாழ்நாளிலேயே அதிக நேரம் எடுத்துக்கொண்டு அப்பா எழுதிய பாடல் இதுதான்.

தன் வாழ் நாளில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு அப்பா எழுதியது ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் என்றால், அப்பா மிகவும் குறைந்த நேரத்தில் எழுதிய பாடலும் இயக்குனர் ஸ்ரீதரின் படத்தில் தான்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ஸ்ரீதர், தனது சித்ராலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ஒரு ஆஸ்பத்திரி செட் போடப்பட்டு, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது படத்தைப் பார்த்த இயக்குனர் ஸ்ரீதர், அதில் இன்னொரு பாடலை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார்.

படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகிறது என்ற விளம்பரமும் பத்திரிகைகளில் வந்துவிட்ட நிலையில், அவருக்கு இந்த யோசனை தோன்றியது.

உடனடியாக எம்.எஸ்.விஸ்வநாதனை ஆபீசுக்கு வரவழைத்து டியூன் போடச் செய்து, டியூனும் தேர்வாகிவிட்டது.

இப்போது பாடல் எழுத கண்ணதாசன் வரவேண்டும்.

இன்றைக்குப் போல செல்போன் இல்லாத காலம் அது. கவிஞரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருவழியாக கவிஞரை கண்டு பிடித்தபோது, அவர் அரசியல் பொதுக்கூட்டத்திற்காக ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.

“நேரமாகிவிட்டது, நான் போகிற வழியில் சித்ராலயாவுக்கு வந்துவிட்டு போய் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

தயாரிப்பு நிர்வாகி சண்முகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. ‘இந்தப் பாட்டோடு படம் வெளியாக வேண்டும் என்றால், இந்த தேதியில் வெளிவராது. சொன்ன தேதியில் வெளியாக வேண்டும் என்றால், ஸ்ரீதர் எடுக்க விரும்புகின்ற பாடல் இல்லாமல் தான் வெளியாகும்’ என்ற முடிவோடு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார்.

கூட்டத்திற்கு கிளம்பிய அப்பா, “சண்முகம் வா போகலாம்” என்று அவரையும் அழைத்துக்கொண்டு சித்ராலயாவுக்கு வந்தார்.

அப்பா வந்தவுடன் அங்கு பரபரப்பு பற்றிக்கொண்டது.

ஸ்ரீதர் சூழலை சொல்ல எம்.எஸ்.விஸ்வநாதன் டியூன் போட, சரியாக பத்து நிமிடங்களில் “முத்தான முத்தல்லவோ” பாடலை எழுதி விட்டு, “ஸ்ரீ, நான் ஊருக்கு போறேன். ஒரு அஞ்சு ரூபா வேணும்” என்று கேட்டார்.

பாடல் அற்புதமாக வந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீதர், “இதோ” என்று பணத்தை தந்துவிட்டார்.

சித்ராலயாவில் அப்பா எப்போதுமே அட்வான்சாகத் தான் பணம் வாங்கி இருப்பார். அவரும் கணக்குப் பார்க்க மாட்டார். அப்பாவும் கணக்கு வைத்துக் கொள்ளமாட்டார்.

ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், பி.மாதவன், என்று பல இயக்குனர் களின் சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் அப்பாவுக்கு கணக்குப் பார்த்து பணம் தந்ததே இல்லை.

அன்று இரவே பாடல் பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக செட் போடப்பட்டு, நடிகர்களுக்கும் கால்ஷீட் சொல்லி மறுநாள் காலையில் தொடங்கி மாலைக்குள் பாடல் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

“தம்பி, கவிஞரைத் தவிர வேற யாராலயும் இவ்வளவு வேகமா இவ்வளவு அற்புதமா பாட்டு எழுதி இருக்க முடியாது” என்று தயாரிப்பு நிர்வாகி சித்ராலயா சண்முகம் 1990-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் என்னிடம் கண்கள் பணிக்கச் சொன்னார்.

-தொடரும்.

எங்கள் வீட்டில் ஆறு ஹால்கள்

அப்பாவுக்கு 14 பிள்ளைகள். எல்லோருமே ஒரே வீட்டில் தான் இருந்தோம். எங்கள் வீட்டின் அமைப்பு வித்தியாசமானது. அவ்வளவு பெரிய வீட்டில் கீழ் தளத்தில் வராண்டா, மூன்று ஹால்கள், இரண்டு படுக்கை அறைகள், சமையல்கூடம். மாடியிலும் அப்படித்தான். ஆனால் பாத்ரூம் மட்டும் ஏழு இருக்கும்.

நாங்கள் அனைவரும் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் அப்பாவின் உதவியாளர்கள் பஞ்சு அருணாசலம், மதுரை திருமாறன், அவினாசிமணி, முத்து, தியாகன், புகழேந்தி மற்றும் பாபுராவ், மாணிக்கம், வசந்தன் என்று அனைவரும் தங்கி இருந்தனர்.

பின்னாளில் பிள்ளைகள் வளரவளர இடப் பற்றாக்குறையால், பெரியம்மா பக்கத்து தெருவில் சேவுகன் செட்டியார் வீட்டு மாடி போர்ஷனுக்கு குடிபோய் விட்டார்கள்.



நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த போது வீட்டில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும். வருடா வருடம் நான்கு பேராவது பெயிலாவது நிச்சயம். பெயில் ஆன யாரையும் அப்பா திட்டியதே இல்லை. “ஒரே பாடத்தை ரெண்டு வருஷம் படிச்சா மனசுல நல்லா பதியும், இந்த வருஷம் பாஸாயிடு” என்று கூலாக சொல்வார்.

என் மகன் ஒன்றாவது வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று நான் அடித்தபோது என் தங்கை ரேவதி என்னிடம் “நீ என்னைக்காவது சரியா படிச்சு இருக்கியா? அப்பா எப்பவாவது உன்னை அடிச்சாரா? இன்னக்கு நீ ரெண்டு எம்.ஏ. பட்டம் வாங்கி இருக்க. உன் பையனும் நிச்சயம் படிப்பான்” என்றார்.

யோசித்துப் பார்த்தால் இன்று எங்கள் வீட்டில் இரண்டு வக்கீல், ஒரு பல் மருத்துவர், ஒரு மருத்துவர், ஒரு விவசாய பட்டதாரி, ஒரு என்ஜினீயர், நான் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவன்.

என் சகோதரர்கள் அனைவரும் பட்டதாரிகள். அண்ணன்கள் காந்தியும், கமாலும் கல்லூரியில் சேர்ந்தபோது அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ‘என் பிள்ளைகளை நான் சரியாக வளர்த்திருக்கிறேன் என்ற பெருமிதம் இருந்தது’ இப்போதும் என் மனக்கண்ணில் இருந்து அகலாமல் இருக்கிறது.

வீட்டில் உறவினர்கள் வேலையாட்கள் என்று வீடு நிரம்பி வழியும். தினசரி குறைந்தது ஐம்பது பேருக்கு சமையல் நடக்கும். இப்போது என் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லும் போது, அவர்கள் ஆச்சரியத்துடன் “நிஜமாவா சொல்றீங்க?” என்று கேட்பார்கள்.

பெரிய பெரிய பாத்திரங்களில் காபி, இட்லி, சட்னி, சாம்பார் என்று வைக்கப்பட்டிருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்து சாப்பிடலாம். கேள்வி கேட்பாரே கிடையாது.

“யாருக்கும் இல்லேன்னு சொல்லக்கூடாது” என்பது அம்மாவுக்கு, அப்பா போட்ட கட்டளை.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகும் அம்மாவின் இறுதிக்காலம் வரை அது தொடர்ந்தது. அந்த புண்ணியம் தான் இன்றுவரை எங்களை காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நான் நினக்கிறேன்.

Next Story