குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:40 AM GMT (Updated: 30 Jun 2019 4:40 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டாரா? அல்லது அவரே விலகிக் கொண்டாரா? இப்போது அமலாபாலுக்கு பதில் அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி யார்? (பி.செல்வகணபதி, சென்னை–18)

அமலாபால் அதிக சம்பளம் கேட்டதால் நீக்கப்பட்டதாக அந்த படக்குழுவினர் கூறுகிறார்கள். ‘கால்ஷீட்’ பிரச்சினை தொடர்பாக விலகிக் கொண்டதாக அமலாபால் தரப்பில் கூறப்படுகிறது. அவருக்கு பதில் அந்த படத்தில், மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!

***

நயன்தாராவுக்கு சரியான போட்டி கீர்த்தி சுரேஷ்தான் என்று என் நண்பன் கூறுகிறான். அது சரியா, தவறா? (எம்.சவுந்தரராஜன், காட்பாடி)

‘‘நான் யாருக்கும் போட்டி இல்லை’’ என்று கீர்த்தி சுரேஷ் கூறுகிறார். இருப்பினும், நயன்தாராவுக்கும், கீர்த்தி சுரேசுக்கும் மறைமுக போட்டி இருந்து வருவதாக இருவருக்கும் பொதுவான ‘கால்ஷீட்’ மானேஜர் கூறுகிறார்!

***

குருவியாரே, வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ என்ன மாதிரியான கதையம்சம் கொண்ட படம்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

காதல், காமெடி, அடிதடி ஆகியவைகளை கொண்ட ஜனரஞ்சகமான கதையம்சம் கொண்ட படம், ‘மாநாடு’ என்கிறார், டைரக்டர் வெங்கட் பிரபு!

***

விஜய்யை வைத்து, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை இயக்கிய எழில், இப்போது டைரக்டு செய்யும் படத்துக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்? அந்த படத்தின் கதாநாயகன் யார்? (எஸ்.சண்முக பாண்டியன், மதுரை)

எழில் டைரக்டு செய்யும் படத்தின் பெயர், ‘ஆயிரம் ஜென்மங்கள்.’ அந்த படத்தின் கதாநாயகன், ஜீ.வி.பிரகாஷ்!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பதற்கு என்ன காரணம்? (வி.ஜெயந்த், திருச்சி)

கதாநாயகன்தான் கதாநாயகியை தொட்டுப்பேசி ‘டூயட்’ பாட முடியும்! ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்க முடியும்...!

***

விஜய் சேதுபதி இதுவரை எத்தனை படங்களில் நடித்து வருகிறார்? (எம்.மகாதேவன், ஈரோடு)

விஜய் சேதுபதி இதுவரை 32 படங்களில் நடித்து இருக்கிறார். 33–வது படத்தில் இப்போது நடித்து வருகிறார்!

***

குருவியாரே, காஜல் அகர்வாலுக்கு எது அழகு? அவருடைய கண்களா, ஒல்லியான உடற்கட்டா? (எஸ்.அன்புக்கரசு, நாகர்கோவில்)

காஜல் அகர்வாலுக்கு அவருடைய மென்மையான உதடுகள்தான் பேரழகு என்கிறார், அவருடைய ஒப்பனையாளர்!

***

சிவகார்த்திகேயன் சொந்த பட நிறுவனம் தொடங்கி படம் தயாரிப்பது ஏன்? (ஏ.கிறிஸ்டோபர், தேனி)

வருமான வரி கணக்கு காட்டத்தான்! கருப்பை வெள்ளையாக்க படம் தயாரிப்பது, ஒரு சிறந்த முடிவாம்!

***

குருவியாரே, ‘ஆடை’ படத்தில் ஆடையே இல்லாமல் நடிக்கும் துணிச்சல் அமலாபாலுக்கு வந்தது எப்படி? (எச்.சுல்தான் செரீப், ஆற்காடு)

‘‘சூட்கேஸ் நிறைய ‘துட்டு’ கொடுத்தால், துணி அவசியம் இல்லை’’ என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலும்!

***

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா, இல்லையா? (ஸ்ரீதர், போரூர்)

நயன்தாரா நடிக்கப் போவதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதிக சம்பளம் கேட்டதால், அவருக்கு பதில் வேறு ஒரு கதாநாயகியை தேடி வருவதாக பேசப்படுகிறது!

***

குருவியாரே, இந்த வருடம் தீபாவளிக்கு எத்தனை படங்கள் மோத இருக்கின்றன? (கே.ஆர்.உதயகுமார், சென்னை–1)

இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த ‘பிகில்’ திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வேறு எந்த படமும் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்படவில்லை!

***

ராய் லட்சுமி இப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிக்கிறாரா, இல்லையா? (கே.கவின், நெய்வேலி)

ராய் லட்சுமி, ‘சின்ட்ரெல்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி டைரக்டர்களாக இருந்த பிரபல டைரக்டர்கள் யார்–யார்? (ஜி.இன்பராஜ், சேலம்)

பாக்யராஜ், சித்ராலட்சுமணன், மனோபாலா, கே.ரங்கராஜ்!

***

கேரள வரவான ஓவியாவின் சுபாவம் எப்படி? அவருடைய குணநலன்கள் பற்றி கூறமுடியுமா? (கே.விஜய், பேராவூரணி)

ஓவியா தன்னை ஒரு பேரழகி என்று நினைப்பதில்லை. அதனால் ஆணவம், அகம்பாவம், கர்வம் ஆகிய மூன்றும் அவரிடம் இல்லை. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை வறுத்தெடுப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஆரம்ப காலத்தில் தன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களை மறக்காதவர், ஓவியா!

***

குருவியாரே, ‘96’ படத்தை இயக்கிய டைரக்டர் பிரேம்குமாரின் சொந்த ஊர் எது? அவர் இப்போது டைரக்டு செய்யும் படம் எது? அந்த படத்தின் கதாநாயகன்–கதாநாயகி யார்–யார்? (ஆர்.டேனியல்ராஜ், தூத்துக்குடி)

பிரேம்குமாரின் சொந்த ஊர், காரைக்குடி. அவர் வளர்ந்தது, படித்தது தஞ்சையில்...இப்போது அவர், ‘96’ படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். விஜய்சேதுபதி நடித்த வேடத்தில் சர்வானந்த் நடிக்கிறார். திரிஷா நடித்த வேடத்தில் சமந்தா நடிக்கிறார்!

***

கே.பாக்யராஜ் டைரக்டு செய்த முதல் படம் எது, அந்த படத்தின் கதாநாயகன்–கதாநாயகி யார்? (வி.முருகராஜ், கோவை)

பாக்யராஜ் டைரக்டு செய்த முதல் படம், ‘சுவரில்லா சித்திரங்கள்.’ அதில் கதாநாயகன், சுதாகர். கதாநாயகி, சுமதி!

***

குருவியாரே, ரஜினிகாந்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த கதாநாயகிகள் யார்–யார்? (ஆர்.ராதா, பெங்களூரு)

ஸ்ரீதேவியும், ஸ்ரீப்ரியாவும்...

***

கமல்ஹாசன் நடித்த தெலுங்கு படங்களில், அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதில் கதாநாயகியாக நடித்தவர் யார்? (எம்.கோவிந்தராஜ், சேலம்)

‘மரோசரித்ரா.’ இந்த படத்தில் கதாநாயகியாக சரிதா நடித்து இருந்தார்!

***

குருவியாரே, ஜெயம், அந்நியன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த சதா என்ன ஆனார்? (என். ஜானகிராமன், ஊட்டி)

சதா போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். இப்போது அங்கேயும் அவர் மார்க்கெட் இழந்து விட்டாராம்!

***

கார்த்திக்கு அக்காவாக நடித்து வரும் ஜோதிகா அடுத்து சூர்யாவுடன் ஜோடியாக நடிப்பாரா? (ஜி.பொன்ராஜ், மும்பை)

இருவருக்கும் பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் சேர்ந்து நடிப்போம்!

***

Next Story