குழந்தை முகம்.. காந்த கண்கள்.. - அதிதிராவ் அழகு ரகசியம்


குழந்தை முகம்.. காந்த கண்கள்.. - அதிதிராவ் அழகு ரகசியம்
x
தினத்தந்தி 30 Jun 2019 6:45 AM GMT (Updated: 30 Jun 2019 6:45 AM GMT)

பிரபல இந்தி நடிகை அதிதி ராவ், கண்களாலே பேசும் காந்த நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் நடித்து தமிழ் ரசிகர் களையும் கவர்ந்தவர்.

பிரபல இந்தி நடிகை அதிதி ராவ், கண்களாலே பேசும் காந்த நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் நடித்து தமிழ் ரசிகர் களையும் கவர்ந்தவர். அவரது குழந்தைத்தனமான முகமும், கவர்ச்சியான உடலும் ரசிகர்களை ரொம்ப கவர்கிறது. அதனால் அதிதிக்கு ரசிகர்கள் ஆதரவு அமோகமாக கூடிக்கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி இயக்குனர்களும் இவர் புகழ்பாடிக்கொண்டிருக் கிறார்கள். அவருடன் ஜாலியான உரையாடல்!

நான் நடிகையானது எனக்கு அதிக பெருமையை தருகிறது. எனக்கு தெரியாமலே என்னை பலர் விரும்புகிறார்கள். இந்த உலகம் என்னை நேசிக்கிறது என்று நினைப்பதே எனக்கு கவுரவத்தை தருகிறது. ரசிகர்கள்தான் எனது பலம். எனது ரசிகர்கள் உலகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இன்று இப்படி இருக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளையும் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

நான் நடிகையானதால் என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. நான் எனது பழைய, இயல்பான வாழ்க்கையை விட்டு விலகிவந்துவிட்டது எனக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம்தான். எனக்கு பிடித்த பல விஷயங்களை விட்டுக்கொடுக்கவேண்டியதாகிவிட்டது. உதாரணமாக சுதந்திரமாக ஷாப்பிங் போவதை விட்டுவிட்டேன்.

நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள். இங்கே சினிமா பின்னணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அறிமுகமாகும்போது ஒரே மாதிரியான மரியாதைதான் கிடைக்கிறது. சினிமா பின்னணி இல்லாததால் பல விஷயங்களை புரிந்துகொள்ள கடினமாகத்தான் இருந்தது. ஒவ்வொன்றையும் புதிதுபோல பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் அவை எல்லாமே புதிய அனுபவங்களாக இருந்தன.

என்னை எல்லோரும் குழந்தைத்தனமான முகத்தை கொண்டவர் என்கிறார்கள். அது உண்மைதான். அதனால் எனக்கு பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. என் முகத்தை பார்த்து என்னிடம் பேசத் தொடங்கியதுமே, அவர்கள் என்னோடு நட்பாகிவிடுவார்கள். சிறுவயதில் நான் செய்த தவறுகளுக்குகூட, என் முகத்தால் தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறேன். என் முகத்திற்கு எல்லா கதாபாத்திரமும் பொருந்திவிடும் என்று டைரக்டர்கள் சொல்கிறார்கள். மனதில் இருப்பதுதான் கண்களில் தெரியும். கண்கள் மனதின் கண்ணாடி. எவ்வளவு கடுமையாக பேசுபவர்களாக இருந்தாலும் என்னைப் பார்த்ததும் சட்டென்று மாறிவிடுவார்கள். இதெல்லாம் எனக்கு லாபம் தானே.

என்னை பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள எனக்கு ரொம்ப ஆர்வம். அதற்காக சமூகவலைத்தளங்களில் உலாவந்தேன். என்னை பற்றி நல்லதும், கெட்டதுமாக ஏராளமாக சொல்லப்பட்டிருந்தது. ஒரே குழப்பமாக இருந்தது. என்னைப் பற்றி என்னுடைய கணிப்பு மட்டுமே சரியாக இருக்கும் என்று தீர்மானித்தேன். அதனால் சமூகவலைத்தளம் என்பது வேலைவெட்டி இல்லாதவர்களுக்கானது என்று முடிவுசெய்துவிட்டேன்.

நான் எந்த மாதிரியான லட்சிய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு அப்படி எந்த கதாபாத்திரத்தின் மீதும் ஆர்வம் இல்லை. ஆனால் சில டைரக்டர்களின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சஞ்சய் லீலா பன்சாலி, மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்கள் என் கனவை நனவாக்கியவர்கள். இனி விஷால் பரத்வாஜ், அனுராக் பசு, சுஜித் சர்கார் போன்ற கனவு இயக்குநர்கள் இயக்கத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.

திரை உலகம் நிரந்தரமானதல்ல என்பது எனக்கு தெரியும். எத்தனையோ போராட்டத்திற்கு மத்தியில் சினிமாவிற்குள் நுழைந்தாலும், தொடர்ந்து நடித்து நமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தக்கவைத்துக் கொள்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் சவாலான விஷயம் தான். இப்போது சிலர் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முன் வந்துவிட்டார்கள். அவர்களோடு போராடுவது கஷ்டம். இன்றைய சினிமாவின் போக்கையே சில நேரங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை. எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது. எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நான் நடிப்பதற்காக எந்த பயிற்சியும் பெற்றதில்லை. நான் எந்த நட்சத்திரங்களின் நடிப்பை எல்லாம் ரசித்தேனோ அவர்களை பார்த்துதான் கற்றுக்கொண்டேன். நிறைய சினிமா பார்ப்பவர்களால்தான் நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஆனால் யாரையும் காப்பியடிக்ககூடாது. நமக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு நடிக்க வேண்டும். அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி.

ஒரு கதாநாயகிக்கு என்ன மாதிரியான தகுதிகள் வேண்டும் என்ற கேள்விக்கு என்னால் சிறப்பாக பதில் அளிக்கமுடிவதில்லை. ஆனால் எங்களுக்கு அழகு முக்கியம். காரணம் கதாநாயகி என்றதும் எல்லோர் கற்பனையிலும் ஒரு அழகான பெண்தான் தோன்றுவார். அந்த கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக கதாநாயகி அமைய வேண்டும். அழகுதான் அத்தனைக்கும் அவசியம்.

Next Story