ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்


ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:05 PM GMT (Updated: 30 Jun 2019 11:05 PM GMT)

ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார்.


பிரபல நடிகர் நெப்போலியன் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஷீனாவும் நடித்துள்ளார். இந்த படத்தை பெல் கணேசன் தயாரித்து இருக்கிறார். குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இதில் நடித்துள்ளது குறித்து நெப்போலியன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“என்னைப்போல் தயாரிப்பாளர் பெல் கணேசனும் அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னிடம் வந்து நான் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்போகிறேன். அதில் உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன்.

என்னை தவிர இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். இந்த படத்தில் நான் ஒரு விளையாட்டு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் ஒரு மணி 35 நிமிடங்கள் ஓடும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்துள்ளது. நடிகர் சங்கத்தில் தலைவராக விஜயகாந்தும், செயலாளராக சரத் குமாரும், துணைத்தலைவராக நானும் இருந்தபோது நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருந்தது. சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி இருக்கக்கூடாது. நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். இப்போது எந்த கட்சியிலும் இல்லை.” இவ்வாறு நெப்போலியன் கூறினார்.


Next Story