திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவி: பாரதிராஜா திடீர் ராஜினாமா


திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவி: பாரதிராஜா திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 1 July 2019 11:52 PM GMT (Updated: 1 July 2019 11:52 PM GMT)

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார்.

சென்னை, 

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.

சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கடந்த மாதம் நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், இணை, துணை உதவி இயக்குனர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்”.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story