பாரதிராஜா விலகியதை தொடர்ந்து இயக்குனர் சங்கத்துக்கு 21-ந் தேதி தேர்தல்


பாரதிராஜா விலகியதை தொடர்ந்து இயக்குனர் சங்கத்துக்கு 21-ந் தேதி தேர்தல்
x
தினத்தந்தி 3 July 2019 11:45 PM GMT (Updated: 3 July 2019 5:54 PM GMT)

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்தனர்.

தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததை டைரக்டர் ஜனநாதன் விமர்சித்தார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். தற்போது தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வருகிற 14-ந் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

வருகிற 8-ந் தேதி இயக்குனர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் நடக்கிறது. இதில் வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் குறித்த தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது. தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

டைரக்டர் ஜனநாதனை தலைவர் பதவிக்கு நிறுத்த ஒரு பிரிவினர் முயற்சித்து வருகிறார்கள். இயக்குனர் சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணைச்செயலாளர்கள், 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Next Story