சினிமா செய்திகள்

பாரதிராஜா விவகாரம்:இயக்குனர் சங்க பொதுக்குழுவில் மோதல் - ரகளை + "||" + Bharathiraja Affairs: Conflict with the Board of Directors - General

பாரதிராஜா விவகாரம்:இயக்குனர் சங்க பொதுக்குழுவில் மோதல் - ரகளை

பாரதிராஜா விவகாரம்:இயக்குனர் சங்க பொதுக்குழுவில் மோதல் - ரகளை
பாரதிராஜா விவகாரத்தால் இயக்குனர் சங்க பொதுக்குழுவில் மோதல் - ரகளை ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்தனர்.

பாரதிராஜாவை தேர்வு செய்ததை இயக்குனர் ஜனநாதன் விமர்சித்தார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். வருகிற 21-ந் தேதி இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர். இயக்குனர் ஜனநாதனை தலைவர் பதவிக்கு நிறுத்தவும் ஒரு பிரிவினர் முயற்சிக்கிறார்கள்.

பாரதிராஜா பதவி விலகியதை தொடர்ந்து இயக்குனர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு விக்ரமன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பாக்யராஜ், ஜனநாதன், ஆர்.வி.உதயகுமார், செல்வமணி, பேரரசு, கரு பழனியப்பன், சித்ரா லட்சுமணன், மனோபாலா, திருமலை, ஏ.வெங்கடேஷ், மங்கை ஹரிராஜன், ரவிமரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கரு பழனியப்பன் பேசும்போது, பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்ததை குறைகூறினார். இதற்கு பாரதிராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினர் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. ஒருவரையொருவர் குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்கள். கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

பின்னர் கரு பழனியப்பன் பேசும்போது, பாரதிராஜா மீது மரியாதை உள்ளது. அவர் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆகலாம். இயக்குனர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அது இயக்குனர் சங்கமா? இல்லை கேளிக்கை விடுதியா? என்றார்.