சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில் : குருவியார் + "||" + Cinema Question-Answer: Kuruviyur

சினிமா கேள்வி-பதில் : குருவியார்

சினிமா கேள்வி-பதில் : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார்? (எம்.ரூபன் சக்ரவர்த்தி, கோவில்பட்டி)

‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தில் இடம்பெறும் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்!

***

குருவியாரே, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? பணம் இருந்தால் போதுமா? (வே.கவுதம், முகப்பேர்)

ஆறு அடிக்கு குறையாத உயரமும், அள்ள அள்ள குறையாத பணமும் இருந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அழகாகவும் இருக்க வேண்டுமாம்!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா ஆகிய இரண்டு பேரில், அழகான மோகினி பேய் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துபவர் யார்? (எஸ்.துரை, ஸ்ரீரெகுநாதபுரம்)

நயன்தாராவை அழகியாக மட்டுமே பார்க்க முடியும். திரிஷா அழகியாகவும் பொருந்துவார்...அழகான மோகினி பேயாகவும் பொருந்துவார் என்கிறார், ஒரு மூத்த ஒப்பனை கலைஞர்!

***

குருவியாரே, திருமணமே செய்து கொள்ளாமல் தனிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பட நடிகர்–நடிகைகள் யார்–யார்? (ஆர்.ராஜ்தீப், மதுராந்தகம்)

எஸ்.ஜே.சூர்யா, வினிதா, சச்சு, கோவை சரளா போன்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள்!

***

குருவியாரே, விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்பது உண்மையா? (ஏ.பி.ஆபிரகாம் லிங்கன், மதுரை)

உண்மைதான். அந்த படத்தில் விஜய் அப்பா–மகனாக 2 வேடங்களில் வருகிறார்!

***

குருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் மிக வேகமாக கார் ஓட்டியவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி என்று சொல்வார்கள்.  தற்போதைய நடிகைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவர் யார்? (பி.பி.விக்ரம் குமார், சென்னை)

தற்போதைய கதாநாயகிகளில் அதிவேகமாக கார் ஓட்ட தெரிந்தவர், மீனாதான். அவர் பாதி நாட்கள் சென்னையிலும், மீதி நாட்களில் பெங்களூருவிலும் வசித்து வருகிறார். அதனால் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் இடையே அடிக்கடி காரில் சென்று வருகிறார். நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுவதில், மீனாவுக்கு ஆர்வம் அதிகம்!

***

மகிமா நம்பியார் கேரளாவை சேர்ந்தவர் என்ற தகவல் எல்லோருக்கும் தெரியும். கேரளாவில் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதுவரை படித்து இருக்கிறார்? அவர் சொந்த குரலில் பாடுவாரா? (ஜி.பிரேம், காஞ்சிபுரம்)

மகிமா நம்பியார் கேரளாவில், காசர்கோட்டை சேர்ந்தவர். அவர் இப்போது தபால் மூலம் ‘எம்.ஏ.’ (ஆங்கில இலக்கியம்) படித்து வருகிறார். லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரையும் போல் இவருக்கும் இனிமையான குரல் வளம் இருக்கிறது. வாய்ப்பு வந்தால் பாட தயார் என்கிறார், மகிமா நம்பியார்!

***

சிவாஜிகணேசன்–ஜெயலலிதா நடித்து அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘தெய்வமகன்,’ ‘பட்டிக்காடா பட்டணமா,’ ‘சவாலே சமாளி.’ இந்த 3 படங்களும் வெள்ளி விழாவை (175 நாட்கள்) தாண்டி ஓடி வெற்றி பெற்றன! ‘தெய்வமகன்’ படத்தின் டைரக்டர், ஏ.சி.திருலோகசந்தர். ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தின் டைரக்டர், பி.மாதவன். ‘சவாலே சமாளி’ படத்தின் டைரக்டர், மல்லியம் ராஜகோபால்!

***

ரேவதி கூட அம்மா வேடத்துக்கு வந்து விட்டாரே...? (ஜே.அருண், தூத்துக்குடி)

எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறி விடுகிற மிக திறமையான நடிகை, ரேவதி. ‘அம்மா’ வேடத்திலும் அவர் பிரகாசிப்பார்!

***

‘‘ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்...நீயொரு தனிப்பிறவி’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் யார்? (ஆர்.எஸ்.மேகநாதன், கொண்டலாம்பட்டி)

அந்த பாடல் இடம் பெற்ற படம்: தனிப்பிறவி. பாடல் காட்சியில் ஜோடியாக நடித்தவர்கள்: எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா!

***

குருவியாரே, தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய இந்தி படம் எது? அதில் நடித்தவர்கள் யார்? (பி.கே.ரவீந்திரநாத், காங்கேயம்)

‘ஷோலே.’ அந்த படத்தில் தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப்பச்சன், ஹேமாமாலினி, ஜெயபாதுரி ஆகியோர் நடித்து இருந்தார்கள்!

***

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த கடைசி படம் எது? (கே.ஆர்.உதயகுமார், சென்னை–1)

‘அரச கட்டளை.’

***

குருவியாரே, நடிகர் ஜீவன் எங்கே போய்விட்டார்? சில வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லையே..? (எம்.பிரபு,  பூந்தமல்லி)

ஜீவன், நடிகர் மட்டும் அல்ல; அவருக்கு வெளிநாடுகளில் சொந்த தொழிலும் இருக்கிறது. தொழில் அதிபராக இருந்து நடிக்க வந்தவர்களில், இவரும் ஒருவர்!

***

குருவியாரே, விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேசுக்கும் ஜோடி பொருத்தம் எப்படி? (ஆர்.பிரபாகரன், மதுரவாயல்)

இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருப்பதால்தான் இணைந்து நடித்து வருகிறார்கள்!

***

கவுதம் மேனன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் இவ்வளவு தாமதமாக திரைக்கு வர என்ன காரணம்? (எஸ்.பி.சூர்யா, திருப்பூர்)

‘பைனான்ஸ்’ பிரச்சினைதான் காரணம்!

***

குருவியாரே, ஜோதிகா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ராட்சசி’ படம் எப்படி? (கே.எம்.அர்ஜுன், திருச்சி)

பள்ளிக்கூட ஆசிரியைகள் பெருமைப்பட்டுக் கொள்கிற மாதிரி, ஒரு படம். பொதுமக்கள் மத்தியில் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு, இதுபோன்ற படங்களில் ஜோதிகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது!

***

நிவேதா பெத்துராஜுக்கு புது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? அவர் இப்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்? (ஆர்.மோகன், குமாரபாளையம்)

நிவேதா பெத்துராஜ் தற் போது விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘சங்க தமிழன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, திருமணத்தின் மீது ஸ்ரேயாவுக்கு என்ன கோபம்? (டி.சி.பாக்கியராஜ், கரூர்)

சூப்பர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவரை, அதே கதாநாயகர்களுக்கு அக்காவாகவும், அம்மாவாகவும் நடிக்க சொன்னால், கோபம் வருமா, வராதா?

***

ரீமா கல்லிங்கல், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? (இரா.ஜெயந்தன், குலசேகரன்பட்டினம்)

ரீமா கல்லிங்கல், கேரளாவை சேர்ந்தவர்!

***