சினிமா செய்திகள்

ஜோதிகாவின் புதிய படம், ‘பொன்மகள் வந்தாள்’ + "||" + Jodhika's new movie ponmagal vanthal

ஜோதிகாவின் புதிய படம், ‘பொன்மகள் வந்தாள்’

ஜோதிகாவின் புதிய படம், ‘பொன்மகள் வந்தாள்’
நடிகை ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பொன்மகள் வந்தாள்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு ‘36 வயதினிலே’ படம் மூலம் இரண்டாவது ரவுண்டை தொடங்கி மீண்டும் வலுவாக காலூன்றி உள்ளார். தொடர்ந்து படவாய்ப்புகள் குவிகின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் ஜோதிகா நடிப்பில் தொடர்ந்து திரைக்கு வந்தன.

ராட்சசி படமும் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ‘ஜாக்பாட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரேவதி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

கார்த்தியுடன் பெயரிடப்படாத படமொன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து பிரட்ரிக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜோதிகா தயாராகி உள்ளார். இந்த படத்துக்கு ‘பொன்மகள் வந்தாள்’ என்று பெயர் வைத்துள்ளனர். இது சிவாஜி கணேசனின் சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்மகள் வந்தாள் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் ஆகிய 4 இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். இதன் பட பூஜை சென்னையில் நேற்று நடந்தது.