சினிமா செய்திகள்

‘வடசென்னை–2’ கைவிடப்பட்டதா?நடிகர் தனுஷ் விளக்கம் + "||" + Actor Dhanush's description

‘வடசென்னை–2’ கைவிடப்பட்டதா?நடிகர் தனுஷ் விளக்கம்

‘வடசென்னை–2’ கைவிடப்பட்டதா?நடிகர் தனுஷ் விளக்கம்
வடசென்னை–2 படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியான தகவலையடுத்து நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் மூன்று பாகங்களாக தயாராகும் என்று அறிவித்துத்தான் முதல் பாகத்தை எடுத்து வெளியிட்டனர். 

தொடர்ச்சியாக வடசென்னை–2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷ் வேறு படங்களில் நடிக்க போய்விட்டார். அவரது நடிப்பில் மாரி–2 வெளியானது. தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து பண பிரச்சினையால் முடங்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வும் திரைக்கு வர தயாராகிறது. 

இந்த நிலையில் வடசென்னை–2 படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் பரவின. சமூக வலைத்தளத்திலும் இது வைரலானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். வடசென்னை–2 படம் தயாராகாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கருத்துகள் பதிவிட்டனர். இதற்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

அதில், ‘‘எனது ரசிகர்கள் மத்தியில் எதனால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது என்று எனக்கு புரியவில்லை. வடசென்னை 2–ம் பாகம் தயாராகும். எனவே என்னுடைய டுவிட்டரில் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை தவிர்த்து எனது படங்கள் சம்பந்தமாக வரும் வேறு எந்த தகவலையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.