இந்தியன்–2, தலைவன் இருக்கிறான் கமல் நடிப்பில் 2 படங்கள்


இந்தியன்–2, தலைவன் இருக்கிறான்  கமல் நடிப்பில் 2  படங்கள்
x
தினத்தந்தி 16 July 2019 11:30 PM GMT (Updated: 16 July 2019 8:01 PM GMT)

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 2 படங்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம்–2 திரைக்கு வந்தது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்–2 படவேலைகள் தொடங்கின. சில காட்சிகளை படமாக்கிய நிலையில் கமலின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ‌ஷங்கர் நிறுத்திவிட்டார். படத்துக்கான பட்ஜெட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். 

இதனால் இந்தியன்–2 படத்தை கைவிட்டதாக தகவல்கள் பரவின. இதனை படக்குழுவினர் மறுத்தனர். இந்த மாதம் இறுதியில் இந்தியன்–2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ‌ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இன்னொரு கதாநாயகியாக பிரியா பவானி சங்கரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 

இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த தலைவன் இருக்கிறான் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பகிர்ந்து அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

கமல்ஹாசனும், ‘‘உங்கள் பங்களிப்புடன் எங்கள் குழுவை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும்போது சரியாக இருக்கும். தலைவன் இருக்கிறான் படம் அதத்தகையதுதான்’’ என்று கூறியுள்ளார். தமிழ், இந்தியில் தலைவன் இருக்கிறான் படம் உருவாகிறது.

Next Story