அஜித் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்


அஜித் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்
x
தினத்தந்தி 19 July 2019 12:08 AM GMT (Updated: 2019-07-19T05:38:43+05:30)

அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

 இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வசூல் அள்ளிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. அஜித் வக்கீல் வேடத்தில் வருகிறார். ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். வினோத் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்கு அஜித்குமார் உதவி செய்து எப்படி மீட்கிறார் என்பது கதை. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிந்தது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கோர்ட்டில் அஜித்குமார் ஆவேசமாக வாதாடும் காட்சிகளும், ரவுடிகளுடன் மோதும் சண்டையும் அதில் இருந்தன.

இரண்டு பாடல்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்த்து யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் 8-ந் தேதி திரைக்கு வருகிறது.

அஜித்குமாரின் விஸ்வாசம் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுபோன்ற வரவேற்பு நேர்கொண்ட பார்வை படத்துக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அடுத்து போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஆகஸ்டு இறுதியில் தொடங்குகின்றனர்.

Next Story