‘தர்பார்’ படப்பிடிப்பு முடிகிறது மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்


‘தர்பார்’ படப்பிடிப்பு முடிகிறது மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 19 July 2019 12:12 AM GMT (Updated: 2019-07-19T05:42:22+05:30)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு என்று கூறி தொடர்ந்து நடித்து வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஆட்சி கவிழ்ந்தால் உடனடியாக கட்சி தொடங்கும் முடிவில் இருந்தார். அதுவும் நடக்கவில்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021-ல்தான் நடக்கும் என்பதால் இன்னும் ஓரிரு படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். தற்போது நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரது முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன்னால் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் டைரக்டர் சிவாவை சந்தித்து பேசினார். அப்போது கதை சம்பந்தமாக அவர்கள் விவாதித்தகாக கூறப்படுகிறது. சிவா ஏற்கனவே சிறுத்தை, வேதாளம், வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர். இதுபோல் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட மேலும் சில இயக்குனர்களும் ரஜினிகாந்திடம் கதை சொல்லி உள்ளனர்.

Next Story