பணபிரச்சினையால் சிக்கல் அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை


பணபிரச்சினையால் சிக்கல் அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
x
தினத்தந்தி 19 July 2019 11:15 PM GMT (Updated: 2019-07-20T00:02:22+05:30)

ஆடை படம் நேற்று திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். திட்டமிட்ட படி ஆடை படம் நேற்று வெளியாகவில்லை.

அமலாபால் நடித்துள்ள ஆடை படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரத்னகுமார் இயக்கி இருந்தார்.

தணிக்கை குழுவினர் படத்துக்கு வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் ஏ சான்றிதழ் அளித்தனர். இந்த நிலையில் அமலாபாலின் ஆடை படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. நிர்வாண காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமலாபாலின் நிர்வாண படங்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த தடைவிதிக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

ஆடை படம் நேற்று திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் நடந்தன. ஆனால் திட்டமிட்ட படி ஆடை படம் நேற்று வெளியாகவில்லை. திரையரங்குகளில் ஆடை படத்தை திரையிடுவது திடீரென்று நிறுத்தப்பட்டன. இதனால் படம் பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் ஆடை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதில் தீர்வு ஏற்பட்ட பிறகே படம் திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story