சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா? அந்த படம் எப்போது திரைக்கு வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘தர்பார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. அந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது!

***

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் ஆன்மிகவாதியா, நாத்திகவாதியா? அவருடைய சொந்த ஊர் எது? (எம்.ராஜேஷ், அம்பாசமுத்திரம்)

அர்ஜுன் தீவிரமான ஆன்மிகவாதி. அவருடைய இஷ்ட தெய்வம், ஆஞ்சநேயர். அவருக்காக அர்ஜுன் ஒரு பிரமாண்டமான கோவிலை கட்டியிருக்கிறார்!

***

குருவியாரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வரும் நித்யாமேனன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? குண்டு உடம்பையும், குள்ளமான உருவத்தையும் வைத்துக் கொண்டு எப்படி 4 மொழி படங்களிலும் நடிக்கிறார்? (ஆர்.ரஞ்சன், சித்தாபுதூர்)

நித்யாமேனன், கேரளாவை சேர்ந்தவர். நடிப்புக்கும், உருவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். ‘நடிகையர் திலகம்’ சாவித்ரியில் இருந்து அனுஷ்கா வரை நிறைய கதாநாயகிகளுக்கு குண்டு உடம்புதான். குண்டு நடிகைகள் அனைவருமே திறமையான நடிப்பாற்றல் கொண்டவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்!

***

அமலாபாலுக்கு கவிதை எழுத தெரியுமாமே...அப்படியா? (சோ.கார்த்திகேயன், பைம்பொழில்)

அமலாபால் திருமணத்துக்கு முன்பு நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இப்போது, சோக கவிதைகள் எழுதி வருகிறாராம்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் எந்த நடிகரும் சாதித்திராத அளவுக்கு சத்யராஜ் வில்லனாக–கதாநாயகனாக–குணச்சித்ர நடிகராக சாதித்து இருக்கிறார். இருப்பினும் அவருக்கு ஏன் பத்ம விருது வழங்கப்படவில்லை? (கே.ஸ்ரீதரன், காஞ்சீபுரம்)

சத்யராஜுக்கு பத்ம விருது வழங்குவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதாம்!

***

சந்தானம் பெண் வேடம் போட்டு அசத்தியிருக்கிறாரா, இல்லையா? (ஏ.பசுபதி, சங்கரன்கோவில்)

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் சந்தானம் கரீனாசோப்ராவாக வந்து, ‘‘சொக்க தங்கம்...சொக்க தங்கம் ஜுவல்லரி’’ என்று கலக்கியதை பார்க்கவில்லையா?

***

குருவியாரே, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரில், சிறந்த அழகி யார்? (எஸ்.வெங்கட்ராமன், ஸ்ரீரங்கம்)

ஒப்பனைக்கு பிறகா அல்லது ஒப்பனைக்கு முன்பா?

***

‘‘சினிமாவில் வாரிசுகள் சுலபமாக வெற்றி பெற முடியவில்லை’’ என்று டைரக்டர் பாக்யராஜ் பேசியிருக்கிறாரே...அவர் யாரை மனதில் வைத்து அப்படி பேசினார்? (மு.ஜெகதீஸ், திருச்செங்கோடு)

பாக்யராஜ் தனது மகன் சாந்தனு, பாண்டியராஜனின் மகன் பிருதிவிராஜ் ஆகிய இருவரையும் மனதில் வைத்துதான் அப்படி பேசினாராம்!

***

குருவியாரே, கண்களால் பேசக்கூடிய ஒரு நடிகையை சொல்ல முடியுமா? (ஏ.பி.விஜய், கோபிச்செட்டிப்பாளையம்)

காஜல் அகர்வாலின் முட்டை கண்களுடன், வேறு எந்த நடிகையின் பெரிய கண்களையும் ஒப்பிட முடியாது!

***

கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? (கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்)

வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இருவரும் சம்மதம் சொன்னால், நாளையே அவர்களை வைத்து படம் எடுக்க பட அதிபர்கள் தயாராக இருக்கிறார்கள்!

***

குருவியாரே, விவசாயம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகர் யார்? விவசாயத்துக்காக அவர் என்ன செய்யப்போகிறார்? (ப.மாணிக்கம், தஞ்சை)

கார்த்திக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை இருக்கிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், நல திட்டம் ஒன்றை அவர் விரைவில் செயல்படுத்த இருக்கிறாராம்!

***

விஜய் ஆண்டனி, அர்ஜுன் ஆகிய இருவரும் நடித்து வெளிவந்த ‘கொலைகாரன்’ படத்துக்கு வரவேற்பு, வசூல் எப்படி? (மா.குருராஜ், கோவை)

‘கொலைகாரன்’ படத்துக்கு வரவேற்பும், வசூலும் அமோகமாகவே இருந்தன!

***

குருவியாரே, ஏற்கனவே செல்வராகவன்–தனுஷ் இருவரும் 3 படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். நான்காவதாக மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைவார்களா? (என்.ரகுராமன், சேலம்)

அதற்கான கதை தேடல் நடைபெற்று வருகிறது!

***

யோகி பாபுவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? இன்னும் முடியவில்லையா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

யோகி பாபு, திருமணம் ஆகாதவர். அவருக்கு இப்போதுதான் பெண் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்!

***

குருவியாரே, இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் சொந்த குரலில் பாடியிருக்கிறாரா? அது எந்த படத்துக்காக? (எம்.முருகவேல், திருப்பூர்)

‘சிக்ஸர்’ என்ற படத்துக்காக அனிருத் சமீபத்தில் பாடியிருக்கிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்–வாணிஸ்ரீ நடித்து, இனிமையான பாடல்களை கொண்ட ‘வசந்தமாளிகை’ படத்தின் இசையமைப்பாளர் யார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘வசந்தமாளிகை’ படத்தின் இசையமைப்பாளர், கே.வி.மகாதேவன்.

***

குருவியாரே, முன்னாள் கனவுக்கன்னி சிம்ரன், இந்நாள் கனவுக்கன்னி நயன்தாரா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்? (கே.சி.ராம்குமார், செந்தாமரைப்பட்டி)

அறுபதை தாண்டியவர்களும் ரசிப்பார்கள். இருபதை தாண்டியவர்களும் ரசிப்பார்கள். இரு தரப்பினரும் அடைகிற இன்ப அதிர்ச்சியில், படம் நூறு நாட்களை தாண்டி ஓடும்!

***

கடை திறப்பு விழாக்கள் மற்றும் ஜவுளி–நகை கடைகள் பற்றிய விளம்பர படங்களில் நடிப்பதற்கு எல்லா நடிகர்களும், நடிகைகளும் ஆர்வமாக இருக்கிறார்களே...என்ன வி‌ஷயம்? (சா.வேதாந்த், செட்டிக்குளம்)

சினிமாவில் நடிக்க கிடைக்கும் தொகையை விட அதிக தொகை விளம்பர படங்களுக்கும், திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்கிறதாம். குறைந்த வேலை, அதிக சம்பளம் என்பதால் நடிகர்களும், நடிகைகளும் அதில் பங்கு பெற ஆர்வம் காட்டுகிறார்கள்!

***

குருவியாரே, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அறிமுகமான சமீராரெட்டிக்கு எத்தனை குழந்தைகள்? (பிரவீன்குமார், வேலப்பன்சாவடி)

சமீராரெட்டிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்!

***

வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து வந்த சரண்ராஜ் திரைப்படங்களில் நடிக்கிறாரா, இல்லையா? (ஓ.கி.சிவா, மதுரை–9)

சரண்ராஜ் அவருடைய மகனை கதாநாயகனாக உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்!

***

குருவியாரே, லட்சுமி மேனன் மீண்டும் சினிமாவில் ‘பிஸி’யாக நடிப்பாரா? (வெ.மணி, திண்டுக்கல்)

அவர் இப்போது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். படிப்பை முடித்து விட்டு நடிப்புக்கு மீண்டும் வருவாராம்!

***

விஷ்ணு விஷாலின் தந்தை சினிமாவில் இருக்கிறாரா அல்லது சினிமா தொடர்பான வேலையில் இருக்கிறாரா? (டி.அசோக், திருபுவனம்)

விஷ்ணு விஷாலின் தந்தை, ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவருக்கும், சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

***