எனது படத்தை தடை செய்ய சொல்வதா? நடிகர் சந்தானம் ஆவேசம்


எனது படத்தை தடை செய்ய சொல்வதா? நடிகர் சந்தானம் ஆவேசம்
x
தினத்தந்தி 24 July 2019 11:15 PM GMT (Updated: 24 July 2019 5:48 PM GMT)

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஏ1.’

படத்தின் டிரெய்லரில் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்வதுபோல் காட்சிகள் இருப்பதாகவும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஏ1 படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சந்தானம் கூறியதாவது:-

“பிராமண பெண்ணுக்கும் பிராமண பையனுக்கும் காதல் என்பதிலும் லோக்கல் பெண்ணுக்கும் லோக்கல் பையனுக்கும் காதல் என்பதிலும் நகைச்சுவையை சேர்க்க முடியாது. ஒரு முரண்பாடு இருந்தால்தான் காமெடி செய்ய முடியும். அதனால்தான் பிராமண பெண் லோக்கல் பையன் காதல் கதையை வைத்து படம் எடுத்தோம்.

நகைச்சுவைக்கு சுதந்திரம் வேண்டும். மலையாள படங்களிலும் வெளிநாட்டு படங்களிலும் நகைச்சுவை காட்சிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. ஆனால் தமிழ் நாட்டில்தான் பிரச்சினை செய்கிறார்கள். அதை செய்ய கூடாது, இதை செய்ய கூடாது என்றால் காமெடி எப்படி வரும். நான் தியேட்டருக்கு போய் கிச்சுகிச்சு மூட்டித்தான் சிரிக்க வைக்க வேண்டும்.

இந்த காலத்தில் படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது. ஐ.பி.எல். வருது, அவெஞ்சர்ஸ் வருது என்றெல்லாம் தள்ளிப்போட வேண்டி இருக்கிறது.”

இவ்வாறு சந்தானம் பேசினார்.

படத்தின் இயக்குனர் ஜான்சன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கதாநாயகி தாரா அலிசா பெரி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் பேசினார்கள்.

Next Story